search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "betting app"

    • ரூ.5 கோடியுடன் கைது செய்யப்பட்டவர் பாகேலுக்கு தர இருப்பதாக கூறினார்
    • ஏமாற்ற கிடைக்கும் எந்த வாய்ப்பையும் காங்கிரஸ் விடாது என மோடி தெரிவித்தார்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகேல் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது.

    இம்மாதம் அங்கு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், அக்கட்சியை வீழ்த்த பா.ஜ.க.வும் தீவிரமாக முயன்று வருகின்றன. பா.ஜ.க. சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் பகுதியை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகிய இருவர் துபாயில் இருந்தவாறு "மகாதேவ் இணையதள சூதாட்ட செயலி" என செயலி ஒன்றை வடிவமைத்தனர். இந்த சூதாட்டத்திற்கான செயலியில் எந்த நிலையிலும் நிறுவனம் பணத்தை இழக்காதவாறு மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருந்தது. புதிதாக விளையாட விரும்புவோர் முதலில் சிறு லாபம் பெறும் வகையிலும், அவர்கள் தொடர்ந்து ஆடும் போது பெரும் தொகையை வைத்து ஆட தொடங்கி அதில் பெரும் நஷ்டம் வரும் வகையிலும், இந்த செயலியை திட்டமிட்டு அமைத்திருந்தனர். இதன் மூலம் பல கோடிகள் லாபமடைந்தனர் இதன் நிறுவனர்கள்.

    இந்நிலையில், அமலாக்க துறையினரால் ரூ.5 கோடியுடன் கைது செய்யப்பட்ட இந்நிறுவனத்திற்கு பணம் கொண்டு செல்லும் ஊழியர் ஒருவர் அதனை 'பாகேல்' எனும் ஒருவருக்கு தர இருப்பதாகவும், முன்னரே ரூ.508 கோடி அவருக்கு அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சத்தீஸ்கர் முதலவர் பூபேஷ் பாகேல் அமலாக்க துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளதாக செய்திகள் தெரிவித்தன.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    உங்களை ஏமாற்றி பணம் பறிக்க காங்கிரஸ் எந்த வாய்ப்பையும் தவற விடாது. அவர்கள் 'மகாதேவ்' எனும் கடவுளை கூட விடவில்லை. சத்தீஸ்கர் மாநிலத்தை சுரண்டிய அனைவரும் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் ஏமாற்றிய ஒவ்வொரு ரூபாய்க்கும் பதில் சொல்ல வைப்போம். இது போன்ற ஊழல்கள் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு ஏமாற்றியவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

    இவ்வாறு மோடி கூறினார்.

    ×