search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amara majid"

    இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் பட்டியலில் தவறுதலாக அமெரிக்க பெண் எழுத்தாளர் படம் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    கொழும்பு:

    கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகப்படும் பயங்கரவாதிகள் 6 பேரின் படங்களை இலங்கை நாட்டு காவல் துறை வெளியிட்டது.

    பயங்கரவாதிகள் பட்டியலில் அப்துல் காதர் பாத்திமா கதியா என்ற பெண்ணின் பெயரும் படமும் இடம்பெற்று இருந்தது. இந்த படத்தில் இருப்பவர் அமெரிக்காவை சேர்ந்த பெண் எழுத்தாளர் என்றும் தவறுதலாக வெளியிடப்பட்டு இருப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

    காவல்துறை வெளியிட்ட புகைப்படத்தில் இருப்பவர் அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் வசிக்கும் எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அமாரா மஜீத் ஆவார். இலங்கை வெளியிட்ட படத்தால் அதிர்ச்சி அடைந்த அமாரா, தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவிட்டிருந்தார்.

    அமாரா இதுபற்றி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

    ‘அனைவருக்கும் வணக்கம், ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலில் நான் தவறாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளேன். இது முற்றிலும் தவறானது. இஸ்லாம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஏற்கனவே கண்காணிப்பு சிக்கல்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனக்கு இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் அவசியம் இல்லை.

    இந்தக் கொடூரமான தாக்குதலுடன் என்னைத் தொடர்புப்படுத்துவதை நிறுத்துங்கள். அடுத்த முறையாவது இதுபோன்ற தகவல்களை வெளியிடும்போது கவனமாக இருங்கள். நீங்கள் வெளியிடும் தகவல்கள், ஒரு குடும்பத்தையும் ஒரு சமூகத்தையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கும்.’

    இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து உலகம் முழுவதிலும் இருந்து இலங்கை காவல்துறைக்கு கண்டனங்கள் எழுந்தன. தற்போது இலங்கை காவல் துறை தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இலங்கை காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் அப்துல் காதர் பாத்திமா காதியா என்ற பெண் தேடப்படும் நபராக உள்ளார். அவரது புகைப்படம் என கூறி வெளியிடப்பட்ட படம் தவறானது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×