search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aghori difference pooja on mother body"

    திருச்சி அருகே மரணமடைந்த தாயின் உடல் மீது அமர்ந்து அகோரி நடத்திய விசித்திர பூஜையானது அப்பகுதி மக்களிடையே வியப்பினை ஏற்படுத்தியது. #Aghori
    திருவெறும்பூர்:

    இறைவனுக்காக தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்து கொண்டதாக கூறுபவர்கள்தான் அகோரிகள். நீண்ட தலைமுடி, உடல் முழுவதும் சாம்பல் அல்லது மண்ணை குழைத்து பூசிக் கொள்வது, தியான நிலை என்று வாழும் அகோரிகள் பெரும்பாலும் இமாலய மலை பகுதிகளான கங்கோத்ரி, யமுனோத்ரி, நேபாளம் ஆகிய இடங்களில் அதிகமாக வசித்து வருகிறார்கள்.

    ஆண்டுதோறும் வடமாநிலங்களில் நடைபெறும் கும்பமேளாவில் திரளாக கலந்துகொள்வார்கள். பெரும்பாலும் மயான பகுதிகளில் வாழ்வதையே கடமையாகவும் கொண்டுள்ளனர். தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களது இஷ்ட தெய்வ கோவில்களை கட்டி பூஜை நடத்தி வருகிறார்கள்.

    அதேபோல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை காசியில் அகோரி பயிற்சி பெற்ற திருச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நிர்வகித்து வருகிறார். இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

    மேலும் அமாவாசை, பவுர்ணமி பூஜை, வளர்பிறை அஷ்டமி பூஜை, தேய் பிறை அஷ்டமி பூஜை ஆகியவையும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு விழா வருகிற 10-ந்தேதி தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கோவில் நிர்வாகியான அகோரி மணிகண்டனின் தாயார் மேரி திடீரென மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் அடக்கம் அரியமங்கலம் மத நல்லிணக்க இடுகாட்டில் நடைபெற்றது. முன்னதாக மேரியின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்றனர். இதில் அகோரிகள் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

    இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அகோரிகள்.

    இடுகாட்டிற்கு சென்றதும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது அகோரி மணிகண்டன் தனது தாயின் உடல் மீது அமர்ந்து, மந்திரங்கள் ஓத பூஜைகள் செய்தார். அவருடன் சக அகோரிகளும் டம்ரா மேளம் முழங்க, சங்கு ஊதி அகோரி பூஜை நடத்தினர்.

    இவ்வாறு இறந்தவரின் உடல் மீது அமர்ந்து அஞ்சலி பூஜை நடத்தினால் அவரது ஆன்மா இறைவனை சென்றடையும் என்று விளக்கம் கூறப்பட்டது. இது அகோரிகளின் வழக்கமாகவும் இருந்து வருகிறது.

    இதையடுத்து மேரியின் உடலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, அடக்கம் செய்தனர். மரணமடைந்த தாயின் உடல் மீது அமர்ந்து அகோரி நடத்திய விசித்திர பூஜையானது அப்பகுதி பொதுமக்களிடையே வியப்பினை ஏற்படுத்தியது.   #Aghori



    ×