search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virtham"

    • அரசமரத்தை சுற்றுவதையும் நோன்பாக கருதுகின்றனர்.
    • அன்றாட நிகழ்வுகள் அனைத்தும் தெய்வத்தை மையமாக வைத்தே நிகழ்கிறது.

    கோயில்களிலும் பிற இடங்களிலும் புதையல் இருப்பதாகவும் ஆண்டவனை வழிபட்டால் அப்புதையல் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். இதனால் சில சடங்குகளின் மூலம் புதை பொருளை அடைய முடியும் எனக் கருதி புதை பொருள் வழிபாட்டினை நடத்துகின்றனர். சான்றாக,

    "எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையிலே

    காக்கா மூக்கின் நிழலிலே

    கள்வர் போகும் வழியிலே

    கண்டானாம் கம்மாளன் கண்ணிலே"

    என்ற நாட்டுப்புறப் பாடல் கம்மாளர் இன மக்கள் புதை பொருள் இருப்பதாகக் கருதி எழுவான், தொழுவான் என்ற சிறுதெய்வத்தை வழிபட்டனர் என்பதை அறிய முடிகிறது.

    நோன்பிருத்தல்

    குழந்தைப் பேற இல்லாத பெண்கள் வரம் வேண்டித் தெய்வத்தை நினைத்து நோன்பிருத்தல் உண்டு. உணவு உண்ணாமல் கடவுளை வேண்டி இருப்பதனையும் நோன்பு என்பர். அரசமரம் அல்லது வேப்பமரம் வைத்துத் தவமிருப்பதை ஒப்பாரிப் பாடல்கள் உரைக்கும்.

    குளித்த பின்னர் ஈரத் துணியுடன் நோன்பிருப்பதைத் தாலாட்டுத் தெரிவிக்கின்றது. பூரண கும்பம் வைத்துப் பொன்னால் விளக்கேற்றி தாமரைப்பூ இட்டுத் தவம் இருப்பதையும், அரசமரத்தை சுற்றுவதையும் நோன்பாகக் கருதுகின்றனர்.

    குழந்தை பெற்ற தாய் நோற்ற நோன்பும், அவள் குழந்தையை வளர்க்கும் அருமையும், அவளுக்கு குழந்தை தரும் இன்பமும், உறவினரின் செல்வ வளமும் தாலாட்டுப் பாடல்களில் இடம் பெறுகின்றன. குழந்தையை தெய்வம் காக்கும் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது என்பதைப் பின்வரும் பாடல்கள் உணர்த்துகின்றன.

    "ஏ ராராரோ ராராரோ

    என் கண்ணே நீ ராராரோ ராரிராரோ

    ஏ வேத்திலை திண்ணாக்க

    என் கண்ணே விரதம் கலங்கு மின்னு

    ஏ கற்புரம் திண்ணல்லவோ

    என் கண்ணே உன்னைக்

    கண்டெடுத்த ரெத்தினமே" (நேர்காணல் - முசிறி)

    வெள்ளி செவ்வா மொளுகி - என் கண்ணே

    வெகுநா தவமிருந்து

    குனிஞ்சு மொளுகையிலே - எந்தெய்வம்

    குழந்தையுனைத் தந்தாரே" (நேர்காணல் - ஏவூர்)

    போன்ற நாட்டுப்புறப் பாடல்களால் தாய் குழந்தை பெற விரதம் இருந்தாள் என்பது புலனாகிறது.

    வெள்ளி தலை முழுகி - என் கண்ணே

    பெருநாளும் தவமிருந்து

    அரசமரஞ் சுற்றி வந்து - என் கண்ணே

    அருந்தவமா கேட்கையிலே

    பாராளும் என் தெய்வம் - என் அறியா

    பாலகனைத் தந்தாரே" (நேர்காணல் - முசிறி)

    அரச மரத்தைச் சுற்றி வந்து இறைவனை வழிபட்டால் பிள்ளைப் பேறு கிட்டும் என்ற நம்பிக்கை நிலவுவதை மேற்கண்ட பாடலால் அறிய முடிகிறது.

    தெய்வம் காக்கும் என்ற நம்பிக்கை:-

    பழங்காலம் முதல் இக்காலம் வரை தெய்வம் காக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது. பாரதியார் வண்டிக்காரன் பாடுவதாகப் பாடும் பாட்டில் வழித்துணையாக நம் குலதெய்வம் காப்பதாக பாடுவதைக் காணலாம்

    "காட்டு வழிதனிலே - அண்ணே!

    கள்ளர் பயமிருந்தால்? - எங்கள்

    வீட்டுக் குலதெய்வம் - தம்பி

    வீரம்மை காக்குமடா

    நிறுத்து வண்டி யென்றே - கள்வர்

    நெருங்கிக் கேட்கையிலே - எங்கள்

    கருத்த மாரியின் பேர் - சொன்னால்

    காலனும் அஞ்சுமடா!"

    என்ற பாடலில் மாட்டு வண்டிக்காரர்கள் நெடுந்தூரப் பயணத்தின் பொழுது பயணத்திற்குத் துணையாக தெய்வம் காக்கும் என்ற நம்பிக்கையில் பாடுவதைக் காண முடிகிறது.

    இவ்வாறாக சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக் கூறுகள் பொதிந்துள்ளமையைக் காணமுடிகிறது. மேலும், சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டுப்புற மக்களின் அன்றாட நிகழ்வுகள் அனைத்தும் தெய்வத்தை மையமாக வைத்தே நிகழ்கிறது என்பதை இவ்வாய்வின் வழி அறிய முடிகிறது.

    • இந்த விரதத்தை 'சாவித்திரி விரதம்', 'காமாட்சி விரதம்' என்றும் அழைப்பார்கள்.
    • இந்த விரதத்திற்காக காரடை செய்து நைவேத்தியம் படைக்கலாம்.

    இன்று (புதன்கிழமை) பெண்கள் காரடையான் நோன்பு இருக்க வேண்டிய தினமாகும். காமாட்சி அம்மனுக்குதான் பெண்கள் காரடையான் நோன்பு இருப்பர். கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைத்து தாங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க இந்த நோன்பிருந்து பெண்கள் வேண்டிக் கொள்வார்கள். சாவித்திரி விரதம், கவுரி விரதம், காமாட்சி விரதம், மாங்கல்ய நோன்பு உள்ளிட்ட பல பெயர்களால் காரடை யான் நோன்பை குறிப்பிட்டு அழைக்கிறார்கள்.

    இந்த நோன்பை பற்றி சொன்னாலே சத்யவான், சாவித்ரி கதை தான் பலரின் நினைவுக்கு வரும். இளவரசி சாவித்திரி, அண்டை தேச இளவரசன் சத்யவான் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் நடைபெற்ற கொஞ்ச நாளில் சத்யவானின் பெற்றோருக்கு கண் பார்வை பறிபோய் விட்டது. உடல் நலம் மட்டுமில்லாமல், அவர்களின் தேசத்தையும் இழந்துவிட்டார்கள். இதனால் காட்டில் தன் கணவருடன் சாவித்திரி வாழ்ந்தாள்.

    அப்போது சீக்கிரமே தன் கணவரும் இறக்க போகிறார் என சாவித்திரி அறிந்து கொண்டாள். தன் கணவர் உயிரை காப்பாற்ற காமாட்சி அம்மனை நினைந்து மனமுருகி விரதம் இருந்தாள் சாவித்திரி. காட்டில் கிடைத்த பொருள்களால் அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து, வழிபட்டு வந்தாள். சத்யவான் உயிரிழக்கும் நாள் நெருங்கியது. அன்றும் சாவித்திரி வழிபாடு செய்தாள். எம தர்மராஜா சத்யவானின் உயிரை எடுத்துவிட்டு புறப்பட்டார். அவரை தடுத்து கணவரின் உயிரை திருப்பித் தர எமனிடம் மண்டியிட்டு மன்றாடினாள்.

    சாவித்திரி இப்படி மன்றாடியது எமனை திடுக்கிட செய்தது. தான் ஒரு சாதாரண மானிட பெண் கண்ணுக்கு எப்படி தெரிகிறோம்? என எமன் குழம்பினார். இந்த பெண் தெய்வசக்தி படைத்தவளோ என எண்ணி, அவளுக்கு பதில் உரைத்தார். இருவருக்கும் வாக்கு வாதம் வந்தது. எமன் சத்யவானின் உயிரை கையில் கொண்டு எமலோகம் சென்றார். உடன் சாவித்திரி துரத்தி சென்றாள். ஒரு மானிட பெண் தன் பூத உடலுடன் எமலோகம் வந்ததை கண்டு மீண்டும் எமன் அதிசயித்து போனார்.

    ஆனாலும் சத்யவானின் உயிரை கொடுக்க மாட்டேன் என எமன் பிடிவாதம் செய்தார். ஆனால் சாவித்திரி மனம் தளரவில்லை. அப்போது சத்யவானின் உயிரை தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் என எமன் கேட்க, சாவித்திரி, 'பதிவிரதை நான். எனக்கு புத்திரப்பாக்கியம் வேண்டும். மாமனார், மாமியாருக்கு பார்வைத்திறன், எங்கள் தேசம் மீண்டும் எங்களுக்கே வேண்டும்' என பல வரங்களை சாவித்திரி கேட்டாள்.

    அனைத்தையும் தருவதாக கூறி நகர்ந்த எமனை மீண்டும் சாவித்திரி தடுக்க, எமன் குழப்பமடைந்தார். பாதி வரம் தான் தந்ததாக சாவித்திரி கூற, அப்போது தான் எமனுக்கு நினைவுக்கு வருகிறது சாவித்திரி பதிவிரதை என்று சொல்லி புத்திரபாக்கியம் கேட்டது. கணவனின் உயிரை மீட்டு கொண்டு வர சாவித்திரி கேட்ட வரம் அவளின் மதிநுட்பத்தின் சான்று. அவளுக்கு எமனிடன் போய் பேச துணிவு கொடுத்தது தெய்வசக்தி. இதை வியந்த எமன் சத்யவானின் உயிரை திரும்ப கொடுத்தார். கணவரின் உயிரை எமனிடம் போராடி சாவித்திரி மீட்ட நாளையே காரடையான் நோன்பாக கொண்டாடுகிறார்கள்.

    மாசி மாதத்தின் கடைசி நாளும், பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் தினத்தில் தான் காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை (புதன்கிழமை) காரடையான் நோன்பு வருகிறது. நாளை காலை 6.29 மணி முதல் 6.47 மணி வரை வழிபாடு செய்ய வேண்டும்.

    பெண்கள் கண்டிப்பாக இந்த விரதம் இருக்கவேண்டும். சுமங்கலி பெண்கள் கணவர் நீண்ட ஆயுள் பெறவும், திருமண மாகாத பெண்கள் நல்ல துணை அமையவும் காரடையான் நோன்பு இருப்பார்கள்.

    அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜையறையில் காமாட்சி படம் அல்லது ஏதாவது ஒரு அம்மன் படத்திற்கு பூக்கள் வையுங்கள். அவர்களுக்கு பூச்சூட்டி வழிபட வேண்டும். காலை முதலாகவே நோன்பை உபவாசம் இருந்து தொடங்குவது நல்லது.

    நம் வீட்டில் உள்ள அம்பாள் படத்திற்கு முன்னால் வெற்றிலை பாக்கு, மஞ்சள் சரடு வைத்து வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். காமாட்சி விருத்தம் பாடவேண்டும். மஞ்சள் சரடில் 2 மல்லிகை பூ அல்லது ஏதேனும் ஒரு பூ வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். இதனை அம்பாள் படத்தின் முன் வைத்து வழிபட வேண்டும். பின்னர் அக்கயிற்றை கணவரிடம் ஆசி பெற்று, அவர் கையால் கட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒருவேளை கணவர் வெளியூரில் இருந்தாலோ, விரதம் இருப்பவர் திருமணமாகாத பெண்களாக இருந்தாலோ வீட்டில் இருக்கும் மூத்தோரிடம் ஆசி பெற்று அந்த கயிரை கழுத்திலோ, கையிலோ நீங்களே கட்டிக் கொள்ளலாம்.

    நாளை காரடையான் நோன்பு சரடு (மஞ்சள் கயிறு) கட்டிக்கொள்ள அதிகாலை 5.10 மணி முதல் 6.10 மணி நல்ல நேரமாகும். இந்த நேரத்தில் நோன்பு சரடு கட்டிக் கொண்டால் பெண்கள் நினைத்தது நடக்கும்.

    அப்போது பெண்கள், "தேவியே, மஞ்சளுடன் கூடிய இந்த நோன்பு கயிற்றை நான் கட்டிக்கொள்கிறேன். இந்த விரதத்தால் நீ சந்தோஷப்பட்டு எனது கணவர் மற்றும் குழந்தைகளின் ஆயுளை நீட்டித்து எப்போதும் அருள் புரிய வேண்டும்" என்று வேண்டி கொள்ள வேண்டும்.

    விசேஷமான இந்த நாளில் தாலி சரடும் கூட மாற்றிக் கொள்ளலாம். இந்த நோன்பிற்காக கட்டிய மஞ்சள் சரடை எப்போதும் அணிந்து கொள்ளலாம். குறைந்தபட்சம் 3 நாட்கள் அணிந்து விட்டும் கழற்றி விடலாம்.

    கார அடை, இனிப்பு அடை ஆகியவை அம்மனுக்கு படைக்கலாம். உருகாத வெண்ணைய்யை காமாட்சி அம்பாளுக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

    • ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரிக்கு ஒரு சிறப்பு உண்டு.
    • ஒவ்வொரு மாத சிவராத்திரி வழிபாடும் ஒவ்வொரு தெய்வத்தால் வழிபடப்பட்டதாகும்.

    பெருமானுக்குரிய விரதங்களில் ஒன்று சிவராத்திரி விரதம். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் வருவதை மகா சிவராத்திரி என்கிறோம். மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று அமாவாசைக்கு முந்தைய நாள் அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    மகா சிவராத்திரியில் விரதம் இருப்போருக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் அடைந்து சகல வளங்களும் வெகு விரைவில் கிட்டும். வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் தடையின்றி நிறைவேறும். அனைத்து பாவங்களும் நீங்கி இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைந்து மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    விரதம் கடைபிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணைசெய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

    தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரிக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாத சிவராத்திரி வழிபாடும் ஒவ்வொரு தெய்வத்தால் வழிபடப்பட்டதாகும். அதன் முழு விபரத்தை இங்கே பார்க்கலாம்.

    சித்திரை மாதம் - உமாதேவியால் வழிபடப்பட்டது.

    வைகாசி மாதம் - சூரிய பகவானால் வழிபடப்பட்டது.

    ஆனி மாதம் - ஈசனால் வழிபடப்பட்டது.

    ஆடி மாதம் - முருகனால் வழிபடப்பட்டது.

    ஆவணி மாதம் - சந்திரனால் வழிபடப்பட்டது.

    புரட்டாசி மாதம் - ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.

    ஐப்பசி மாதம் - இந்திரனால் வழிபடப்பட்டது.

    கார்த்திகை மாதம் - சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.

    மார்கழி மாதம் - லட்சுமியால் வழிபடப்பட்டது.

    தை மாதம் - நந்தி தேவரால் வழிபடப்பட்டது.

    மாசி மாதம் - தேவர்களால் வழிபடப்பட்டது.

    பங்குனி மாதம் - குபேரனால் வழிபடப்பட்டது.

    மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், சிவ நாமங்களை சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். மாத சிவராத்திரியில் சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும் நந்திதேவரையும் வழிபட வேண்டும். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்தால் பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைப்பார் சிவபெருமான்.

    ×