search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "75 percent vote"

    அசாம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் சுமார் 75 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. #Assampanchayatpolls #Assampanchayatsecondphase
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் உள்ள 251 ஜில்லா பரிஷத் அமைப்புகள், 1304 பஞ்சாயத்து அமைப்புகள், 1304 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மற்றும் 13 ஆயிரத்து 40 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிக்கு டிசம்பர் 5 மற்றும் 9 தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடத்த அம்மாநில தேர்தல் கமிஷன் தீர்மானித்தது.

    அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க.வுடன் சட்டசபையில் கூட்டணியாக செயல்படும் அசாம் கனபரிஷத் கட்சி இந்த தேர்தலை தனியாக சந்திக்கிறது. பா.ஜ.க., காங்கிரஸ், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன.

    இங்குள்ள 16 மாவட்டங்களில் 15 ஆயிரத்து 899 பதவிகளுக்கு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் சுமார் 81.5 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.



    இந்நிலையில், மீதமுள்ள 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 169 ஜில்லா பரிஷத் அமைப்புகள், 895 பஞ்சாயத்து அமைப்புகள்,  895 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மற்றும்  8950 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிகளுக்கு இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இன்றிரவு எட்டுமணி நேர நிலவரப்படி, சுமார் 75 சதவீதம் வாக்குகள் பதிவானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 900 வாக்குச்சாவடிகளில் கடைசி நேரத்துக்கு பின்னரும் வாக்குப்பதிவு நடைபெற்றதாக அம்மாநில தேர்தல் அதிகாரி ஹெச்.என்.போரா தெரிவித்தார். இதனால், வாக்குப்பதிவு சதவீதம் சற்று அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக, இன்றைய வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. கச்சார், கரிம்கஞ்ச், நல்பாரி மாவட்டங்களுக்கு உட்பட்ட 8 வாக்குச் சாவடிகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இங்கு வரும் 11-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இருகட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் வரும் 12-ம் தேதி எண்ணப்பட்டு, அன்று பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகும். #Assampanchayatpolls #Assampanchayatsecondphase
    ×