என் மலர்
வழிபாடு

2026 New Year rasi palan- மேஷம் முதல் கடகம் வரை 4 ராசிபலன்களுக்கான புத்தாண்டு ராசிபலன்
- உற்சாகமான மேஷ ராசியினருக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
- ரிஷப ராசியினருக்கு 2026ம் ஆண்டு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
மேஷ ராசி நேயர்களே!
உற்சாகமான மேஷ ராசியினருக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பிறக்கப் போகும் 2026ம் ஆண்டு மேஷ ராசியினருக்கு லாபத்தை ஏற்படுத்தி தரக்கூடிய ஆண்டாக அமையப் போகிறது. இந்த ஆண்டின் கிரக நிலவரங்கள் மேஷ ராசிக்கு மிக சாதகமாக இருப்பதால் உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் வாழ்க்கையை நடத்துவதில் நிலவிய சங்கடங்கள் அகலும். உங்களின் முயற்சிகள் வெற்றி வாய்ப்பை அள்ளித் தரும். சில சில சங்கடங்கள் வந்தாலும் அவற்றை உங்கள் திறமையால் சரி செய்து முன்னேற்றம் அடைவீர்கள்.
குருவின் சஞ்சார பலன்கள்
2026 ஆம் ஆண்டு துவக்கத்தில் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிக்கப் போகிறார். 2026 ஜூன் மாதம் 2ம் தேதி முதல் 4ம்மிடமான சுகஸ்தானத்திற்கு செல்கிறார். இது உங்களுக்கு இழந்ததை மீட்டு தரக்கூடிய அமைப்பாகும். தடைபட்ட பாக்கியங்கள் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் முயற்சிக்கு உகந்த அற்புதமான நேரம். முன்னோர்களின் நல்லாசியால் பூர்வ புண்ணிய பலத்தால் சொத்துத் தகராறுகள் அகலும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என அவரவர் வயதிற்கேற்ற சுப பலன்கள் உண்டு. பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்கும்.
சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்பு தேடி வரும். பொருளாதாரத்தில் நிலவிய சிக்கல், சிரமங்கள் விலகி பொருள் வரவு அதிகரிக்கும். வராக்கடன்கள் வசூலாகும். கடன் சுமை குறையும். அடமானப் பொருட்களை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் அமையும். சொத்துக்கள் சேர்க்கை அதிகமாகும். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும்.சொத்துக்களின் மதிப்பு உயரும்.ஆரோக்கியத்தில் நிலவிய பாதிப்புகள் அகலும். திருமணம், குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். பெண்களுக்கு தாய் வழியில் சொத்துக்கள், பணம், நகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சனியின் சஞ்சார பலன்கள்
2026ம் ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் நின்று விரயச் சனியாக பலன் தருவார். இது மேஷ ராசிக்கு ஏழரைச் சனியின் காலமாகும். தடைகள் தகரும் வாரம். பொதுவாக ராசி மற்றும் லக்னத்திற்கு அசுப கிரகங்களான சனி, ராகு, கேது, செவ்வாய் சம்பந்தம் இல்லாமல் இருப்பது நல்லது. கடந்த காலங்களில் ராசியை சனி பார்த்ததால் ஏற்பட்ட சங்கடங்கள் அதிகம். தற்போது ஏழரைச் சனி துவங்கினாலும் சனியின் பார்வை ராசியில். பதிந்த காலத்தில் ஏற்பட்ட துன்பத்துடன் ஒப்பிட்டால் எதுவும் நடக்காதது போல் இருக்கும். எனவே மனதை அலட்டாமல் நேர்மையுடன், நியாயத்துடன் செய்யக் கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். தடைகள் தகரும்.
இதுவரை இருந்த வந்த சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். நல்ல வரன்கள் தேடி வரும். வாழும் கலையை உணர்ந்த உங்களை எந்த வினையும் பாதிக்காது. அனைத்து செயலிலும் நிதானம் மற்றும் பொறுமை மிக முக்கியம். நேர் மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் அதிக கவனத்துடன் படிக்க வேண்டிய காலமாகும். பள்ளி கல்லூரி படிப்பில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.
ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்
2026ம் ஆண்டின் துவக்கத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது பகவானும் லாப ஸ்தானத்தில் ராகு பகவானும் சஞ்சரிப்பார்கள். 5.12.2026 முதல் சுகஸ்தானத்தில் கேது பகவானும் தொழில் ஸ்தானத்தில் ராகு பகவானும் சஞ்சரிப்பார்கள். ஒரு ஜாதகத்தில் பணபர ஸ்தானம் என்பது 2, 5, 8,11ம் மிடங்களாகும். தற்போது கோச்சாரத்தில் 11ம் இடத்தில்நிற்கும் ராகு பகவான் ஆண்டு முழுவதும் உங்களுக்கு தேவையான பொருளாதாரத்தை வழங்க காத்திருக்கிறார். பாதியில் அரைகுறையாக நின்ற அனைத்துப் பணிகளும் துரிதமாகும். அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். திட்டமிட்டபடி பாகப் பிரிவினைகள் சுமூகமாகும். தொழில் சார்ந்த வெற்றிகள் தேடி வரும். பிறவிக் கடன் மற்றும், பொருள் கடனிலிருந்து விடுபடுவீர்கள். பெயர், புகழ், அந்தஸ்து, கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் விரும்பிய மாற்றங்கள் உண்டாகும்.
பூர்வீகத்தில் புதிய அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு. சில பிள்ளைகள் கல்விக்காக விடுதிக்கு செல்வார்கள். பெண்களுக்கு தந்தையின் பூர்வீக வீடு, பங்களா கிடைக்கும். தம்பதிகளிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கும். திருமண முயற்சி கைகூடும். மறுமணத்திற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள், பணிச் சுமையால் மன சஞ்சலம் உண்டாகும். பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடு அகலும்.
அசுவினி
மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அறிவாற்றல் மெருகேறும். வெகு விரைவில் வளமான எதிர்காலம் ஏற்படும். உணர்வுப் பூர்வமாக செயல்படாமல் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உங்களுக்கு எதிராக செயல் படுபவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. குடும்பத்தில் நிலவிய சிறு சிறு குழப்பங்கள் மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நெருக்கடிகள் விலகும். சமூக அந்தஸ்து உயரும். தடைகள் தகர்ந்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கூடி வரும்.
பிள்ளைகளால் பெருமை சேரும். பணவரவு அதிகரிக்கும் பொற்காலம் என்றால் அது மிகையாது. அடமான நகைகள் மீண்டு வரும். தேவையான உதவிகள் விரும்பிய இடத்திலிருந்து கிடைக்கும். வயதானவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் சுப காரியங்களை முன்னின்று நடத்தும் கடமையும். தொழில், உத்தியோகம் அனுகூலம் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் திருமண வாய்ப்புகள் கூடிவரும்.நோய்த் தாக்கம் குறையும். வெளிநாட்டு வாய்ப்பு தேடி வரும். விநாயகர் வழிபாட்டால் இன்பங்களை அதிகரிக்க முடியும். பசுவிற்கு அகத்திக்கீரை தானம் வழங்க நன்மைகள் அதிகரிக்கும்.
பரணி
நம்பிக்கை அதிகரிக்கும் வருடம். உங்கள் செயல்பாடுகள் வெற்றிகரமாக அமையும். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் உங்களை வழி நடத்த போகிறது. வீட்டில் சுப காரியப் பேச்சு வார்த்தைகள் நடக்கும். ஆடம்பரச் செலவை குறைத்து எதிர் நீச்சல் போட்டால் வெற்றி நடைபோட முடியும். குடும்பத்தில் ஒற்றுமையும், அன்யோன்யமும் உண்டாகும். திடீர் எதிர்பாராத பணவரவால் தேவைகள் அனைத்தும் நிறைவு பெறும். தொழில் சீராக நடந்தாலும் லாபம் நிற்காது. அதிக முதலீடுகள் கொண்ட தொழில் நடத்துபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும்.
இதுவரை கடனை திரும்பத் தராத உறவுகள் கடனை செலுத்துவார்கள். பூமி,வீடு, வாகனம் வாங்கும் சிந்தனைகள் மேலோங்கும். தாய்வழிச் சொத்திற்காக தாய் மாமாவுடன் கருத்து வேறுபாடு, பகைமை உருவாகும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. வழக்குகளை ஒத்தி வைப்பது நல்லது. அமைதியாக இருப்பது அவசியம். அமைதியால் அனைத்து பிரச்சனைகளும் அடிப்பட்டு போகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். மாணவர்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பயிற்சியை கடைபிடிப்பது நல்லது. கருமாரியம்மனை வழிபட்டால் மன நிம்மதி கூடும்.
கிருத்திகை 1
இழுபறிகள் குறையும்.தொழிலில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். வர்த்தகம் லாபத்துடன் நடக்கும். அதிர்ஷ்டசாலியாக திகழ்வீர்கள். பூர்வீகச் சொத்து தொடர்பான இழுபறிகள் நீங்கும். உங்களுக்கு சேர வேண்டிய பாகப் பிரிவினை பங்கு சொத்தாகவோ, பணமாகவோ முழுமையாக வந்து சேரும். சிலர் பூர்வீகப் பங்குப் பிரிவினை பணத்தில் பழைய கடன்களை அடைத்து விட்டு புதிய வீடு, வாகனம் வாங்கலாம். சிலருக்கு மனைவி வழி சொத்தில் மாமனாருடன் நிலவிய கருத்து வேறுபாடு மாறும். தடைபட்ட வெளிநாட்டு பயணம், வேலை வாய்ப்பு கைகூடும். தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும்.
பெண்களுக்கு உயர்ரக ஆடம்பர ஆடை, பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரரால் சகாயங்கள் உண்டாகும். கணவன் அல்லது மனைவிக்கு உத்தியோக ரீதியான மாற்றங்கள் உண்டாகும். நம்பிய வேலையாட்களால் சில அசவுகரியங்கள் உண்டாகும். தொழில் சார்ந்த அரசின் சட்ட திட்டங்களை விதிகளை கடைபிடிப்பது அவசியம். விரலுக்கேற்ற வீக்கம் தான் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அகலக்கால் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். சிதம்பரம் நடராஜரை வழிபட மேன்மையான பலன்கள் நடக்கும்.
பரிகாரம்: பழனி மலை முருகனை வழிபடுவதால் மலை போல் வந்த துயரம் பனி போல விலகும்.
ரிஷப ராசி நேயர்களே!
நிம்மதியை விரும்பும் ரிஷப ராசியினருக்கு 2026ம் ஆண்டு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் வருடமாக அமைய நல்வாழ்த்துக்கள்.எந்த ஒரு செயலிலும் வேகம் இருக்கும். நேரத்திற்கு நல்ல சாப்பாடு ஆரோக்கியத்தை காப்பாற்றக்கூடிய வகையில் ஓய்வு நிம்மதியான தூக்கம் சந்தோஷமான வாழ்க்கை என்ன நிம்மதியாக இருப்பீர்கள். பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்பது ஜோதிட பழமொழி. இந்த 2026ம் ஆண்டு பத்தாம் இடத்தில் ராகு பகவான் இருப்பதால் தொழிலில் முன்னேற்றமான பலன்களை எதிர்பார்க்கலாம். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களின் சாதனைகள் பாராட்டப்படும். இதுவரை தடை தாமதத்தை ஏற்படுத்திய அனைத்து முயற்சிகளும் சாதகமாகும்.
குருவின் சஞ்சார பலன்கள்
ஆண்டின் துவக்கத்தில் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் 2026 ஜுன் 2 முதல் வெற்றி ஸ்தானத்திற்கு செல்லப் போகிறார். குருபகவான் தனம், வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் 5 மாத காலம் திட்டமிட்டு செயல்பட்டால் பெரிய தொகையை சம்பாதிக்க முடியும். நீங்கள் விரும்பிய இடப்பெயர்ச்சி நடக்கும். ஊர் மாற்றம் வேலை மாற்றம் பதவி மாற்றம் வரலாம். தொழிலில் கடந்த காலங்களில் நிலவிய நெருக்கடிகள் குறைந்து படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். ஸ்திர சொத்துக்களில் முதலீடு செய்யக்கூடிய அமைப்புகள் உள்ளது. தாயையும் தாய் வழி உறவுகளையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். அடமான நகைகள் சொத்துக்களை மீட்கக்கூடிய அமைப்பு உள்ளது.
உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். கற்ற கல்வி பலன் தரும். நிரந்தர வேலை கிடைக்கும். முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் பிறர் மதித்திடக் கூடிய உயர்வான நிலையை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தினால் மருத்துவச் செலவு குறையும். கண், பல் முகம் போன்றவற்றில் அறுவை சிகிச்சை செய்ய உகந்த காலமாக இருக்கும். திருமணத்திற்கான முயற்சிகள் சாதகமாகவே இருக்கும். பெரிய எதிர்பார்ப்பை குறைத்தால் 2026 இல் திருமணம் நடக்கும்.
சனியின் சஞ்சார பலன்கள்
ரிஷப ராசிக்கு ஆண்டு முழுவதும் சனிபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். உழைப்பிற்கான பலன் கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட், பங்குச் சந்தை போன்ற துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான லாபகரமான பலன் கிடைக்கும். பொதுவாக சனி பகவானோ ராகு கேதுவோ 11ம்மிடமான லாப ஸ்தானத்திற்கு வரும்போது சுயதொழில் பற்றிய ஆர்வம் அதிகம் இருக்கும்.
தற்போது லாப ஸ்தானத்தில் சனி பகவான் நிற்பதால் பலருக்கு சுயதொழில் ஆர்வம் உதயமாகும். அடுத்து சனிப் பெயர்ச்சியாகி மேஷ ராசிக்கு வந்தவுடன் உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகும்.உங்கள் சுய ஜாதக ரீதியான தசா புத்தி சாதகமாக இருந்தால் இப்போது புதிய தொழில் தொடங்கலாம். தசா புக்தி சாதகமற்றவர்கள் இருப்பதை காப்பாற்றிக் கொள்வது நல்லது. நடக்க கூடிய தசா புத்திகளே ஒருவருக்கு வாழ்வின் பலன்களை நிர்ணயிப்பதால் பெரிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பு சிந்தித்து செயல்படுவது நல்லது. அதே நேரத்தில் முதலீடு இல்லாத சுய தொழில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்
ஆண்டின் துவக்கத்தில் 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் கேதுவும் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் ராகு பகவானும் நின்று பலன் தருவார்கள். 5.12.2026 அன்று கேது பகவான் 3ம்மிடமான வெற்றி ஸ்தானத்திற்கும் ராகு பகவான் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்திற்கும் செல்கிறார்கள். பொதுவாக 4,10ம் இடங்களில் ராகு கேதுக்கள் சஞ்சரிக்கும் காலம் லக்னத்திற்கும் ஏழாம் இடத்திற்கும் பாதிப்பு ஏற்படும். இந்த காலகட்டங்களில் திருமணத்திற்கு வரம் தேடுபவர்கள் மிகுந்த கவனத்துடன் தேட வேண்டும் தவறான வரனை நம்பி பின்னாளில் வருத்தப்படக்கூடாது. அதேபோல் நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையுடன் எந்தவித கருத்து வேறுபாடும் வைத்துக் கொள்ளக் கூடாது.
தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சிலர் தாய் வழி உறவுகளுடன் தேவை–யற்ற பகைமையை ஏற்படுத்–திக் கொள்வார்கள். புதிய சொத்துக்களை வாங்கும் போதும் விற்கும்போதும் அனுபவஸ்தர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. சிலர் தவறான விலை நிர்ணயம் செய்து விடுவார்கள். உதாரணமாக ஒருவர் வாங்கக் கூடிய சொத்தின் மதிப்பு 5 லட்சம் என்றால் 6 லட்சத்திற்கு வாங்குவார்கள். அதே நேரத்தில் ஒருவர் விற்கக்கூடிய சொத்தின் மதிப்பு 5 லட்சம் என்றால் 4 லட்சத்திற்கு விற்பார்கள். இழப்பு எந்த விதத்தில் வேண்டுமானாலும் ஏற்படும் என்பதால் சாதகம் பாதகம் அறிந்து செயல்பட வேண்டும்.
கிருத்திகை 2, 3, 4
திடீர் முன்னேற்றங்கள் உண்டாகும் வருடம். லாப ஸ்தானத்தில் நிற்கும் சனிபகவான் எதிர்பாராத வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தரலாம். காலம் கனியும்போது கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும். வீடு, வாகன யோகம் மற்றும் முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். சகோதர சச்சரவுகள் விலகும். குடும்ப உறுப்பினர்கள் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
விரைவில் சிலர் தொழில், வேலைக்காக குடும்பத்தை பிரிந்து வெளியூர், வெளிநாடு செல்லலாம். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். அரசு பணியாளார்கள் வீண் பழியிலிருந்து விடுபடுவார்கள். திருமண வரன் பார்ப்பதில் கவனம் மற்றும் பொறுமை தேவை. சிலருக்கு விருப்ப திருமணம் நடைபெறும். வீடு, வாகன யோகம் கை கூடி வரும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய குறைபாடு அறுவை சிகிச்சையில் சீராகும். வியாழக்கிழமை நவக்கிரக குரு பகவானை வழிபடவும்.
ரோகிணி
சந்திரனின் ஆதிக்கம் பெற்ற ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 2026ம் ஆண்டில் விவேகத்துடன் செயல்பட்டு விரும்பிய இலக்கை அடைவீர்கள். தனித்திறமை வெளிப்படும். முயற்சியில் தளர்ச்சி இல்லாத வளர்ச்சி உண்டாகும். புதிய தேடல்கள் உருவாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். உடன் பிறப்புகளால் அனுகூலமும், ஆதாயமும் உண்டாகும். பொன் பொருள், சேர்க்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் தரம் உயரும். எதையும் சமாளித்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பெற்ற பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும்.
தந்தை வழி உறவுகளிடம் இருந்த சங்கடங்கள், பிரச்சனைகள் விலகி ஆதரவு உண்டாகும். தொழில், உத்தியோக ரீதியான வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். கடன், நோய், எதிரி தொல்லைகள் அகலும். கணவன், மனைவி அன்பாக இல்லறம் நடத்துவார்கள். புதிய வீடு வாங்குதல், புதிய வீடு கட்டி குடிபுகுதல், போன்ற பாக்கிய பலன்கள் இனிதே நடந்தேறும். போட்டி பந்தயங்கள், கலந்து கொள்பவர்கள் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. நீண்ட காலமாக தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபடவும்.
மிருகசீரிஷம் 1,2
எதிர்பாராத தன லாபம் உண்டாகும் வருடம். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழிலை விட்டு விலகி விடலாம் என்று நினைத்தவர்களுக்கு கூட நம்பிக்கையை அதிகரிக்கும் விதமான மாற்றங்கள் ஏற்படும்.அரசு உத்தியோகத்திற்கு நல்ல செய்தி தேடி வரும். வருமானம் அதிகரிக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்கிய நிலை மாறும். தேவையற்ற செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும்.புதிய சொத்துகள் வாங்கும் போது முறையான பத்திரப் பதிவுவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். புத்திர பிராப்தம் உண்டாகும். திருமணத் தடை அகலும். மன ரீதியாக, உடல் ரீதியாக அனுபவித்த வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருந்த நோய்கள் சாதாரண வைத்தியத்தில் குணமாகும். குல தெய்வ கோவில் மற்றும் ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.கணவன், மனைவி ஒற்றுமையாக இருந்தாலும் மூன்றாம் நபரின் குறுக்கீடு நிம்மதி குறைவை ஏற்படுத்தும் என்பதால் பிறரின் நயவஞ்சக பேச்சை நம்பக்கூடாது.வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும்.அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு சிறப்பு.
பரிகாரம்: சுப பலனை அதிகரிக்க கால பைரவரை அரளி மாலை அணிவித்து வழிபடவும்.
மிதுன ராசி நேயர்களே!
எதிலும் வெற்றி வாகை சூடும் மிதுன ராசியினரே துவங்கப் போகும் 2026 ஆம் ஆண்டு துக்கம், துயரம், சங்கடங்கள் விலகும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். உழைப்பிற்கான உன்னத பலனை அடையக் கூடிய அற்புதமான வருடம். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் கூடும். உங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சிறப்பான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். உங்களுக்குள் மறைந்து கிடந்த திறமைகளை உணரப்போகிறீர்கள். பெயர், புகழுடன் வாழும் அமைப்பு உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். புத்திக் கூர்மை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு நீங்கும். திட்டமிட்டு செயல்பட பணம், புகழ், அந்தஸ்து, கவுரவ பதவி, பதவி உயர்வு போன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் ஈடேறும்.
குருவின் சஞ்சார பலன்கள்
ஆண்டின் துவக்கத்தில் ராசியில் இருக்கும் குரு பகவான் 2.6.2026 முதல் தனம் வாக்கு குடும்பஸ்தானத்திற்கு செல்கிறார். 2026 ஆம் ஆண்டில் பொருளாதார மேன்மை அடையக்கூடிய ராசிகளில் மிதுன ராசியும் ஒன்றாகும். முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள். ஆண்டு முழுவதும் பொருளாதாரத்தில் மேன்மையான பலன்கள் இருக்கும். கமிஷன் அடிப்படையான தொழில்கள் பேச்சை மூலமாகக் கொண்ட தொழில்கள் துவங்குவதற்கு இது நல்ல காலமாக இருக்கும். பணவரவு சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன் நெருக்கடிகள் சற்று குறையும். வாக்கு வன்மையால், பண பலத்தால் விரும்பியதை சாதித்துக் கொள்வீர்கள்.
பங்கு வர்த்தகர்களுக்கு மிகச் சாதகமான காலம். அரசாங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். சிலருக்கு பணிக் காலம் முடிந்தப் பிறகும் பதவி நீடிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். பகைமை பாராட்டிய உறவுகள் தற்போது பக்க பலமாக இருப்பார்கள். கணவன் மனைவி ஊடல் கூடலாக மாறும். இறைவழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நிலவிய மனக்கசப்பு மாறும். பழைய வீட்டைப் புதுப்பிப்பீர்கள். பொழுது போக்கான விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற சுப நிகழ்விற்கு எதிர்பார்த்திருந்த தொகை கிடைத்து பணவரவு சரளமாகும்.
சனியின் சஞ்சார பலன்கள்
மிதுன ராசிக்கு 8,9-ம் அதிபதியான சனி பகவான் கோட்சாரத்தில் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இந்த ஆண்டு முழுவதும் அவர் தொழில் ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பார். தொழில், உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து படிப்படியான முன்னேற்றம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு விண்ணப்பித்த கடன், பண உதவிகள் கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். சிலர் புதிய வேலை வாய்ப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். அரசு உத்தியோக முயற்சி கைகூடும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு சமூக அந்தஸ்து உயரும் அற்புதமான நேரம்.
பிறருக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம், சொத்து மதிப்பு உயர்தல், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு என்று எல்லாவிதமான நன்மைகளையும் அடைவீர்கள். குடும்ப உறவுகளின் அனுசரனையால் அனைத்து பிரச்சனைகளும் கானல் நீராக மறையும். சிலரது காதல் பிரிவினையில் முடியும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும். தாத்தா பாட்டியை சந்தித்து நல்லாசி பெறுவீர்கள்.
ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்
2026-ம் ஆண்டில் கேது பகவான் 3-ம் மிடமான வெற்றி ஸ்தானத்திலும் ராகு பகவான் 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்கள். ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் 5ம் நாள் கேது பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கும் பெயற்சியாகிறார்கள். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும். எனவே தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது. பூர்வீகச் சொத்தில் சித்தப்பா மற்றும் மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட குழப்பங்கள் முடிவிற்கு வரும். தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும். பணம் சம்பாதிக்கும் சிந்தனையுடனே இருப்பீர்கள்.
குழந்தை பாக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் வைத்தியத்தில் சீராகும். பிள்ளைகளின் திருமணம், குழந்தை பாக்கியம், உத்தியோக, தொழில் அனுக்கிரகம் மன நிம்மதியைத் தரும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலருக்கு நிலம், வீடு போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும். கை,கால், மூட்டு வலியால் ஏற்பட்ட அவதியிலிருந்து விடுதலை உண்டாகும். சிலர் குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை தேடி அலைவார்கள். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு சமூக அந்தஸ்த்தை நிலைப்படுத்தும் கவுரவப் பதவிகள் கிடைக்கும். தியாக மனப்பான்மை மிகுதியாகும்.
மிருகசீரிஷம் 3, 4
அனைத்து விதமான செயல்களிலும் அனுகூலமான பலன் உண்டாகும் வருடம். மகிச்ழ்சியான நிம்மதியான மன நிலையில் இருப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும்.கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். ஆசிரியர் பணி மற்றும் பேச்சை மூலதனமாக கொண்டவர்களுக்கு மேன்மை உண்டாகும். பல வழிகளில் வருமானம் வந்து மனதை மகிழ்விக்கும்.
பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். தாய் வழி உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலுத்துவீர்கள். நிதி நெருக்கடிகள் நீங்கும். அதே வேளையில் சுபச்செலவுகளும் அதிகமாகும். தடைபட்ட சுப காரியங்களும் முக்கிய பணிகளும் சுலபமாக நடந்து முடியும். விருப்ப திருமணத்திற்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். வீடு, வாகன யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். மறு திருமணத்தால் ஏற்பட்ட மனச் சங்கடம் நீங்கும். சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்வில் நாட்டம் அதிகரிக்கும்.விஷ்ணு காயத்திரி படிப்பது நல்லது.
திருவாதிரை
விரும்பிய மாற்றம் தேடி வரும் வருடம். மனதும் உடலும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கும். திடீர் ஜாக்பாட் மூலம் பண வருவாய் அதிகரிக்கும். பணவரத்து திருப்தி தரும். தடைபட்ட பணவரவு சீராகும். வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்தவர்கள் வீடு தேடி வந்து பணத்தை கொடுப்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு உள்ளது.உடன் பிறந்தவர்கள், பங்காளிகளிடம் அனுசரித்துச் சென்றால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
ஒரு பெரிய பணம் சொத்து விற்பனையில் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் நிலவிய அசவுகரியங்கள் நீங்கும். தொழில் வேலையில் சில இடர்கள் வந்தாலும் அதை பொருட்டாக மதிக்காமல் முன்னேறுவீர்கள். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நன்மையும் தீமையும் கலந்த வருடமாகவே இருக்கும் என்பதால் ஒரு செயலில் இறங்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். தினமும் நடராஜரை வழிபடுவதால் நன்மைகள் கூடும்.
புனர்பூசம் 1,2,3
மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது மிக மிக யோகமான காலம் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குலத் தொழில் செய்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி பல மடங்காகும்.தொழிலில் பிறர் ஆச்சரியப்படும் வகையில் கணிசமான லாபம் கிடைக்கும். சட்ட ரீதியான நெருக்கடிகள் நீங்கும். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப கிடைக்கும். சிலருக்கு அத்தை அல்லது சித்தியின் மூலம் அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும்.
வேலையின்மையால் அவதிப்பட்டவர்களுக்கு அரசு, தனியார் துறையில் நல்ல வேலை கிடைக்கும். நோய் தொல்லை குறையும். இளைய சகோதர, சகோதரி மூலம் நிலவிய குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்து கிடைப்பதில் நிலவிய சட்டச் சிக்கல் மறையும். அரசின் உதவித் தொகை கிடைக்கும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி சாதகமாகும். உயர் கல்வி முயற்சி கைகூடும். குழந்தைகளின் மந்த தன்மை நீங்கும். தடைபட்ட குல தெய்வ வேண்டுதல்கள் நிறைவேறும். பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். ஸ்ரீ ராமர் வழிபாட்டால் மேன்மை பெற முடியும்.
பரிகாரம்: மிதுன ராசியினர் மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுவதால் ஏற்றம் உண்டாகும்.
கடக ராசி நேயர்களே!அன்பான பண்பான கடக ராசியினரே தாயன்பு நிறைந்த கடக ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு விபரீத ராஜயோகத்தை கொடுக்கக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. கெட்டவன் ராகு அஷ்டமஸ்தானத்தில் இருப்பதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். தடை, தாமதங்கள் விலகும் வருடம். மன சங்கடங்கள் அகலும்.ஞாபக சக்தி அதிகரிக்கும். தைரியமும் தெம்பும் குடிபுகும். நினைப்பது நடக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும்.ஏற்றமான பலன்கள் உண்டாகும்ஆத்ம ஞானம் கிடைக்கும். உடலுக்கும் ஆன்மாவுக்கும் புத்துணர்வு தரும் நல்ல நிகழ்வுகள் நடக்கும்.
குருவின் சஞ்சார பலன்கள்
கடக ராசிக்கு 6,9-ம் அதிபதியான குரு பகவான் வருட ஆரம்பத்தில் 12ம் மிடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.ஜூன்2, 2026 வரை விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வருடம். அதன் பிறகு ராசிக்கு வந்து ஜென்ம குருவாக உச்சம் பெற போகிறார். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இழப்புகளிலிருந்து மீள முடியும். தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், நண்பர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய அளவில் பண முதலீடு செய்ய வேண்டாம். யாருக்கும் பெரிய பணம் கடனாக கொடுக்க வேண்டாம். சிலருக்கு சுப விரயங்கள் மிகுதியாகும். சிலர் தொழில், உத்தியோகம் அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாம்.
பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத விரயங்களை சந்திக்க நேரும். சேமிப்பு கரையும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. ஜாமீன் பொறுப்பு ஏற்கக் கூடாது. சிலருக்கு திருமணம், வீடு, வாகனம் என சுப செலவுகளும் ஏற்படலாம். வேலை பார்க்கும் இடத்தில் பிறர் விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பங்கு வர்த்தகர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது அவசியம். விரயமும் இழப்பும் எந்த விதத்தில் வேண்டுமானலும் இருக்கலாம் என்பதால் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
சனியின் சஞ்சார பலன்கள்
கடக ராசிக்கு 7. 8-ம் அதிபதியான சனிபகவான் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கவலைகள் அகலும். உற்சாகமாக, ஆரோக்கியமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த முன்னேற்றங்களால் மனம் மகிழும் தொட்டது துலங்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம் அல்லது பழைய தொழிலை விரிவாக்கம் செய்யலாம். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும்.
கருத்து வேறுபாட்டுடன் வாழ்ந்த தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். திருமணம், குழந்தை பேறு, வேலை வாய்ப்பு சொத்துச் சேர்க்கை போன்றவற்றில் நிலவிய தடைகள் அகலும். தேவைக்கேற்ற தன வரவால் குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அழகு, ஆடம்பர நவீன பொருட்கள், தங்க, வெள்ளி நகை சேர்க்கை அதிகரிக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு மிக சாதகமான நேரம். தந்தையின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை.உற்றார், உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்லும் போது வீண் மனஸ்தாபங்களைத் தவிர்க்கலாம்.
ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். பொதுவாக அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வருவது நல்லது. அந்த வகையில் அசுப கிரகமான ராகு பகவான் எட்டாம் இடத்திற்கு செல்வதால் சில அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு கை கொடுக்கும். ராகுவிற்கு குருப் பார்வை இருப்பதால் அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாக வாய்ப்பு உள்ளது. எல்லா செயல்களையும் எளிதாக சமாளித்து விடுவீர்கள். விபரீத ராஜ யோகம் உங்களை வழிநடத்தப் போகிறது. வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். பல வருடங்களாக சொத்தில் ஆக்கிரப்பு செய்தவர்கள் தாமாகவே வெளியேறுவார்கள்.
அடமான நிலங்களை மீட்கக் தேவையான பண உதவி கிடைக்கும். வீடு மாற்றம், வேலை மாற்றம் அல்லது ஊர் மாற்றம் என அவரவர் விரும்பிய மாற்றங்கள் உண்டாகும். பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டாகும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் சுப செலவிற்காக ஒரு தொகையை செலவு செய்ய நேரும். வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள். சிலருக்கு பிறரின் பொறாமை குணத்தால் கண் திருஷ்டி உருவாகலாம். இந்த காலகட்டங்களில் அரசின் சட்ட திட்டங்களை மதிப்பது நல்லது.
புனர்பூசம் 4
கடக ராசி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர், புகழ் அந்தஸ்து உயரும் அனுகூலமான வருடமாக அமையும். கவுரவப் பதவிகள், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். வியாபாரத்தில் நிலவிய மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். எந்தப் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரிந்து அதன்படி செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் பூர்வீகச் சொத்தில் நிலவிய மன உளைச்சல் குறையும். சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்குச் சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்குச் செல்வார்கள்.
அடமானச் சொத்து, நகைகளை மீட்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தையை குடும்ப பெரியவர்களின் முன்பு நடத்துவது நல்லது. தாயின் ஆரோக்கிய குறைபாடு அகலும். விவசாயிகள் பல வருடங்களாக பயன்படாமல், பயிரிட முடியாமல் கிடந்த தரிசு நிலங்களில் போதிய மழைப் பொழிவால் விவசாயம் செய்யலாம். திருமணத் தடைகள் அகலும். மேலதிகாரி, முதலாளிகள், சக ஊழியர்களால் ஏற்பட்ட தொந்தரவு அகலும். இறைவழிபாட்டால் மகிழ்ச்சியை அதிகரிக்க அஷ்டலட்சுமியை வழிபடவும்.
பூசம்
எண்ணியது ஈடேறும் வருடம். வாழ்க்கையை நகர்த்துவதில் இருந்த சிரமங்களை சீராகி நிம்மதி அடைவீர்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வு சமனாகி வட்டிக்கு வட்டி கட்டிய நிலைமாறும். சொல்வாக்கால் மற்றவர்களால் மதித்திடக்கூடிய நிலையை அடைவீர்கள். விலகிய குடும்ப உறவுகள் நட்பு பாராட்டுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊருக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு உண்டாகும். செய்தி, தகவல் தொடர்பு, ஆலோசனை வழங்கி புத்தியைத் தீட்டி சம்பாதிப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும்.
அரசியல் பிரமுகர்களுக்கு கட்சி மேலிடம் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்ட பகை அகலும் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பு உண்டாகும். 8ம்மிட ராகுவை சமாளிக்க தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வீடு, வாகனம், தொழில் போன்றவற்றிற்கு விண்ணப்பித்த கடன் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் டென்சன், அலைச்சல் குறையும்.சிவ வழிபாடு செய்யவும் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
ஆயில்யம்
கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 2026-ம் ஆண்டு மிகச் சாதகமாக உள்ளது. வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும். அனைத்து வேலைகளும் சிறிய முயற்சியிலேயே சிறப்பாக நடைபெறும். தடைகளை தகர்த்து வெற்றிநடை போடுவீர்கள். உடலிலும் உள்ளத்திலும் புதிய தெம்பு, தைரியம் குடிபுகும். வைத்தியம் பலன் தரும்.
தொழிலில் இருந்து வந்த தேக்க நிலை அடியோடு மாறி நிறைவான லாபம் காண்பீர்கள். தடைபட்டிருந்த வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். புத்திர பாக்கியம், திருமணம் போன்ற தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் நடைபெறும். புத்திரர்கள் வழியில் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மருமகனால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட 2026-ம் ஆண்டு ராஜயோகம் உண்டாகும்.
பரிகாரம்: கடக ராசியில் பிறந்தவர்கள் 2026ம் ஆண்டு சமயபுரம் மாரியம்மனை வழிபட சாதகமான பலன்கள் உண்டாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






