என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
- பாகூர் அருகே கீழ்பரிக்கல்பட்டு காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்
- அங்குள்ள தனியார் கம்பெனியில் துப்புரவு வேலை செய்து வந்தார்.
புதுச்சேரி:-
பாகூர் அருகே மகள் இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர் அருகே கீழ்பரிக்கல்பட்டு காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(வயது50). இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் துப்புரவு வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி.
இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது 2-வது மகள் சுகந்தி (26). இவருக்கும் கடலூர் கொடிக்கால் குப்பத்தை சேர்ந்த சரத்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுகந்தியை பிரசவத்திற்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்த போது அங்கு திடீரென சுகந்தி இறந்து போனார். மகள் இறந்த வேதனையில் அன்பழகன் மது பழக்கத்துக்கு ஆளானார். மகளின் இழப்பை மறக்க அன்பழகன் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார்.
அவருக்கு அவரது மனைவி விஜயலட்சுமி ஆறுதல் கூறி வந்த போதும் எப்போதும் மகள் நினைவாகவே அன்பழகன் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் அன்பழகன் தனது மனைவியிடம் இறைச்சி வாங்க பணம் கேட்டார். அதற்கு விஜயலட்சுமி இப்போது கடை திறந்து இருக்க மாட்டார்கள் பின்னர் வாங்கி கொள்ளலாம் என கூறி தூங்கி விட்டார்.
பின்னர் 6 மணிக்கு விஜயலட்சுமி எழுந்து வீட்டு தோட்டத்துக்கு சென்ற போது அங்கு குளியல் அறையில் கணவர் தூக்கு போட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






