என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
அரசு மருத்துவ கல்லூரி ஊழியர்களுக்கு பணி ஆணை-முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
- பணி நிரந்தரம் செய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சாகும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
- கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 700 தினக்கூலி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி மருத்துவமனை மேலே ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் செய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சாகும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாலை 4 மணிக்கு என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கவர்னர் தமிழிசையை சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்தனர்.
கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
தொடர்ந்து முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்திக்க ஊழியர்கள் திலாசுபேட்டையில் உள்ள அவரின் ஆன்மீக குரு அப்பா பைத்தியம்சாமி கோவிலுக்கு சென்றனர்.அங்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். பூஜை முடிந்த பிறகு ஊழியர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி பூஜையை முடித்துக் கொண்டு ஒரு மணி நேரமாக கோவில் வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது தலைமை செயலகத்தில் இருக்கும் மருத்துவமனை இயக்குனரை தொடர்பு கொண்டு பணி ஆணை தயாராகிறதா என கேட்டறிந்தார்.
அதற்கு உடனடியாக தயார் செய்யப்பட்டு வருகிறது. சற்று நேரத்தில் கோவிலுக்கு வந்து விடுவோம் என்று கூறியதால் முதல்-அமைச்சர் ரங்கசாமி அமைதியாக கோவில் வாசலில் அமர்ந்து இருந்தார்.
அதன் பிறகு தலைமை செயலகத்திலிருந்து பணி ஆணை கொண்டுவரப்பட்டு முதல்-அமைச்சரிடம் கொடுக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் கோவிலில் காத்திருந்து 700 ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி நள்ளிரவு 11.15 மணியளவில் வழங்கினார். இதில் உற்சாகமடைந்த ஊழியர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.
அப்போது அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள், ஏ.கே.டி.ஆறுமுகம் கே.எஸ்.பி.ரமேஷ், , பாஸ்கர், லட்சுமி காந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






