என் மலர்
புதுச்சேரி

டெல்லியில் மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது பங்கீட்டுத்துறை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதியை சந்தித்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கோரிக்கை மனு அளித்த காட்சி.
புதுச்சேரியில் நெல் கொள்முதலுக்கு தளர்வு அளிக்க வேண்டும்- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வலியுறுத்தல்
- புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் டெல்லியில் மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது பங்கீட்டுத்துறை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதியை சந்தித்தார்.
- பெரும்பாலான விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் நிர்ணயிக்கப்பட்ட தரம் இல்லை என்று கொள்முதல் செய்யப் படுவதில்லை.
புதுச்சேரி:
இந்திய உணவு கழகம்பு துவையில் நெல் கொள்முதலுக்கு தளர்வு அளிக்க வேண்டும் என்று மத்திய உணவு மந்திரியிடம் தேனீ.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் டெல்லியில் மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது பங்கீட்டுத்துறை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதியை சந்தித்தார்.
அப்போது, புதுவை யில் இந்திய உணவு கழகம் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதில் உள்ள இடர்பாடுகளை தெரிவித்து அதற்கு தீர்வு காணும் விதமாக சில தளர்வுகளை அறிவிக்குமாறு கோரிக்கை வைத்தார்.
புதுவை, காரைக்காலில் 3 ஆண்டுகளாக இந்திய உணவு கழகம் நெல் கொள்முதல் செய்து வருகிறது. ஆனால் உற்பத்தியில் 1-2 சதவீதம் மட்டுமே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
பெரும்பாலான விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் நிர்ணயிக்கப்பட்ட தரம் இல்லை என்று கொள்முதல் செய்யப் படுவதில்லை.
கடற்கரை ஓரமாக அமைந்திருப்பதால் பருவகாலத்தில் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் அறுவடை நேரத்தில் நெல்மணிகளில் சற்று கருப்பு நிறம் ஏற்படுகிறது.
இதனை ஒரு காரணமாகக் கொண்டு தரம் குறைவாக இருப்பதாக கூறி விவசாயிகளிடமிருந்து இந்திய உணவு கழகம் நெல் கொள்முதல் செய்வதை தவிர்க்கிறது.
எனவே, இந்த காரணத்தை கருத்தில் கொள்ளாமல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்திட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலர் மனோஜ் அஹூஜாவை அமைச்சர் சந்தித்தார். அப்போது மத்திய அரசின் திட்டமான தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலமாக புதுவைக்கு 3 ஆண்டுகளாக நிதி ஒதுக்கவில்லை. இந்த ஆண்டு தேவையான நிதி ஒதுக்க வேண்டும்.
5 ஆண்டுகளாக இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. இப்போது ரூ.3 கோடி மதிப்பில் திட்ட வரைவு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் தர வேண்டும்.
2020-21 சம்பா பயிர் செய்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
இவை அனைத்தையும் உடனடியாக கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய வேளாண்துறை செயலர் உறுதியளித்தார். மேலும் கூடுதல் செயலர் சஞ்சீவ் குமார், கூடுதல் செயலர் அபிலாஷ் லிக்கி, இணைச் செயலர் டாக்டர் விஜயலட்சுமி, இணைச் செயலர் சாவி ஜா, இணைச் செயலர் சாமுவேல் பிரவீன்குமார் மற்றும் இயக்குனர் விஜய் ராஜ்மோகன் ஆகியோரையும் சந்தித்து புதுவைக்கு தேவையான நிதியினை ஒதுக்க அமைச்சர் கோரிக்கை வைத்தார்.
இந்த சந்திப்பின்போது புதுவை வேளாண் செயலர் ரவி பிரகாஷ், அமைச்சரின் தனி செயலர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.






