என் மலர்
புதுச்சேரி

கூட்டத்தில் பங்கேற்ற மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் தலைவர்கள்.
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் புதுவை அரசுக்கு அக்கறை இல்லை
- நாராயணசாமி தாக்கு
- விவசாயிகள் அனைத்து சலுகைகளையும் மோடி அரசு பறித்துள்ளது அத்தியாசிய பொருட்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
திருபுவனை வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் மதகடிப்பட்டில் நடந்தது.
கூட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஜெயக்குமார், துளசிங்க பெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில பொதுசெயலாளர் தனுசு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-
மத்தியில் மோடி ஆட்சி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வந்தால் மோதல் இருக்காது. நல்லது நடக்கும் என மக்கள் வாக்களித்தனர் ஆனால் தற்போது அண்ணன், தங்கை சண்டை நடந்து வருகிறது. இது பற்றி யாராவது கேட்டால் அண்ணனுடன் எந்த சண்டையும் இல்லை என கவர்னர் தமிழிசை கூறுகிறார்
அதே நேரத்தில் ரங்கசாமி கோப்பு காலதாமதமாகிறது, கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்படும் கோப்பு திரும்புவதில்லை, அதிகாரிகள் வேலை செய்வதில்லை என்று கூறுகிறார்.மோடி வந்தால் எல்லாம் கிடைத்து விடும் என்று சொன்னார்கள்
ஆனால் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை அமைச்சர்கள், எம்.எல்.ஏ. க்கள் ஊரை சுற்றி வருகிறார்கள். தவறு செய்த அதிகாரியை மாற்றி விட்டார்கள் ஆனால் அவர்கள் குற்றவாளி என அரசாங்கம் அறிவித்ததா.?
தமிழகத்தின் மகளிர் இலவச பேருந்து, குடும்பத் தலைவருக்கு ஆயிரம் வழங்கும் திட்டம் புதுவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் செயல்படுத்தப்படவில்லை. கியாஸ் மானிய திட்டமும் அது போல் தான் இருக்கிறது. இதற்கு ரங்கசாமியும் மோடியும் தான் காரணம்
பா.ஜனதா வுக்கு ரங்கசாமி துணை ரங்கசாமிக்கு அன்பழகன் துணை என்று இருக்கிறார்கள். என்ஆர். காங்கிரஸ்-அதிமுக கூட்டணி இதுவரை உடையவில்லை. நீங்கள் இவர்களில் யாருக்கு வாக்களித்தாலும் அது மோடிக்கு தான் கிடைக்கும்
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி பேசியதாவது:-
மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இரட்டிப்பு மானியம் தருவதாக விவசாயிகளிடம் வாக்கு கேட்டார். ஆனால் தற்போது உரத்திற்கான மானியத்தை நிறுத்தி விட்டார்கள். விவசாயிகள் அனைத்து சலுகைகளையும் மோடி அரசு பறித்துள்ளது அத்தியாசிய பொருட்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் அதானி போன்றவர்களுக்கு கடன் என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் வாரி கொடுக்கப்படுகிறது.
அமலாக்கத்துறை சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை பலவீனமாக பிரதமர் மோடி நினைக்கிறார். ஆனால் மோடியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து விட்டார். புதுவை அமைச்சர்கள் வெளிநாடுகளில் லஞ்சப் பணத்தை பதுக்குகிறார்கள். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை. நாம் உருவாக்கியவர்கள் நம்மை முதுகில் குத்தி விட்டு செல்கிறார்கள்.
அதில் முதலாமவர் ரங்கசாமி, 2-வது நமச்சிவாயம் 3-வது அங்காளன். ரங்கசாமி கோரிமேட்டை தாண்ட மாட்டார். ரங்கசாமியின் ஆட்சி குறை பிரசவம் சீக்கிரம் முடிந்துவிடும்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
கூட்டத்தில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், பி.சி.சி. உறுப்பினர் நடராஜன்,நிர்வாகிகள் கோதண்டபாணி, வேணு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






