என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
முதல்-அமைச்சரின் புலம்பல் புதுவை மக்களிடம் எடுபடாது
- 17 ஆயிரம் முதியோருக்கு புதிதாக உதவித்தொகை வழங்க ஆணை பெற்றார்.
- மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுதான் ஒரு நல்ல அரசுக்கு உதாரணம்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நான் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும், நான் சொன்னால் தட்டாமல், எல்லோரும் செய்ய வேண்டும் என நினைப்பது சர்வாதி காரத்தின் உச்சகட்டம்.
முதல்-அமைச்சர் நினைத்தது எது நடக்கவில்லை? கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் 300-க்கும் மேற்பட்டோரை பணி நிரந்தரம் செய்தார்.
பதவி ஏற்றவுடன் முதியோர் உதவித் தொகையை ரூ.500 உயர்த்தினார். 17 ஆயிரம் முதியோருக்கு புதிதாக உதவித்தொகை வழங்க ஆணை பெற்றார். காரைக்கால் துறைமுகத்தை தனியாருக்கு கைமாற்ற சம்மதம் பெற்றார்.
புதுவையில் 6 மதுபான ஆலைகளை தொடங்க அனுமதி பெற்றார். புதுவை மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் கவர்ச்சி நடன மதுபார்கள் திறக்க அனுமதி பெற்றார். நகர பகுதிக்குள் இருந்த பார்களை மாநில எல்லைகளில் இடமாற்றம் செய்ய ஒப்புதல் பெற்றார்.
இதற்கெல்லாம் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் முதல்-அமைச்சரால் எப்படி அனுமதி பெற முடிந்தது. இதற்கு அனுமதி அளித்த அதிகாரிகள், தற்போது எதற்கு அனுமதி தர மறுக்கிறார்கள் என முதல்-அமைச்சர் நீலிக்கண்ணீர் வடிப்பதன் அர்த்தம் என்ன?
தற்போதுள்ள அதிகாரிகள் வானத்தில் இருந்து குதித்தவர்களா? அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு எந்த திட்டத்தையும் செயல்படுத்தினால் அதிகாரிகள் ஏன் மறுப்பு சொல்லப் போகிறார்கள்? முதல்- அமைச்சருக்கு எதிர்கேள்வி கேட்டால் பிடிக்காது.
சட்டவிரோதமாக, சுயலாபத்துக்காக திட்டங்களை கொண்டு வந்தால் அதிகாரிகள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். அதற்குரிய விளக்கத்தை அளித்து, திட்டங்களையும், மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுதான் ஒரு நல்ல அரசுக்கு உதாரணம்.
எதற்கெடுத்தாலும் மாநில அந்தஸ்து இல்லை, அதிகாரம் இல்லை என புலம்புவதையும், விரக்தியாக பேசுவதையுமே முதல்-அமைச்சர் வாடிக்கையாக வைத்துள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் நீங்கள் விரும்பியபடி கூட்டணி அரசுதானே செயல்படுகிறது.
1963-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட யூனியன் பிரதேச சட்டத்தில் தேவையான திருத்தத்தை டெல்லியில் முகாமிட்டு கொண்டு வரலாமே? அதிகாரிகளை அழைத்து பேசி இப்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றியும், தேவையான திருத்தங்களையும் மத்திய கூட்டணி அரசின் உதவியோடு செயல்படுத்த முதல்-அமைச்சர் முன்வராதது ஏன்?
முதல்-அமைச்சர் இருக்கையில் இருக்கிறேன் என எண்ண தோன்றுகிறது என புலம்பிக் கொண்டே, அதே பதவியில் நீடிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. காமராஜர் வழியில், உங்களால் முடியவில்லை என்றால், இளைஞர்கள் ஆளட்டும் என வழிவிட்டு விலகி செல்ல வேண்டியதுதானே? இப்படியெல்லாம் யார் நம்மை எதிர்த்து கேள்வி கேட்கப் போகிறார்கள்? என்ற எண்ணம்தான் முதல்-அமைச்சரை கபட நாடகம் ஆட வைக்கிறது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்குகிறது. அரிதாரம் பூசி, முகமூடி அணிய வேண்டிய காலம் வந்துவிட்டது. தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள, மக்களை ஏமாற்றும் காலம் நெருங்கிவிட்டது என எண்ணும் உங்களின் மனவோட்டம் தெளிவாக புரிகிறது.
பலரை ஒருநாள் ஏமாற்றலாம், சிலரை பல நாள் ஏமாற்றலாம். ஆனால் எப்போதும் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது. புதுவை மக்கள் விழித்துள்ளனர், முதல அமைச்சரை பற்றி உணர்ந்துள்ளனர். இனி அவரின் புலம்பலும், பொய்யுரையும் மக்களிடம் என்றும் எடுபடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






