என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
வாலிபரை கத்தியால் குத்திய கும்பல்
- புதுவை நயினார்மண்ட பம் நாகம்மாள் நகர் ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.
- அவரது தம்பி முத்து மற்றும் இவர்களது கூட்டாளிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
புதுச்சேரி:
புதுவை நயினார்மண்ட பம் நாகம்மாள் நகர் ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். கட்டிட மேஸ்திரி. இவரது மகன் பாலாஜி இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ், அவரது தம்பி முத்து மற்றும் இவர்களது கூட்டாளிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 2மாதத்துக்கு முன்பு இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் அலெக்சை பாலாஜியும் அவரது நண்பரும் சேர்ந்து தாக்கினர். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அலெக்ஸ் அவரது தம்பி முத்து மற்றும் இவர்களது கூட்டாளிகள் பாலாஜியின் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் இருந்து பாலாஜியின் தந்தை ராஜேந்திரனிடம் உனது மகன் எங்கே? என்று கேட்டனர். அதற்கு ராஜேந்திரன் தனது மகன் திருவண்ணாமலைக்கு பாதயாத்திரையாக சென்றிருப்பதாக தெரிவித்தார்.
அப்போது அலெக்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் ராஜேந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி விட்டு சென்றனர். நேற்று காலை பாலாஜி வீட்டுக்கு வந்ததும் அவரது தந்தை நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.
இதையடுத்து ஆவேச மடைந்த பாலாஜி தந்தையை மிரட்டி விட்டு சென்றவர்களை தட்டிக்கேட்க முடிவு செய்தார். அதற்கு அவரது தந்தை ராஜேந்திரன் மறுத்தும் அதனை ஏற்காமல் பாலாஜி மோட்டார் சைக்கிளில் அலெக்சின் வீட்டுக்கு சென்றார்.
அங்கிருந்த அலெக்ஸ், அவரது தம்பி முத்து மற்றும் இவர்களது கூட்டாளிகளான செந்தில், சவுந்தர் ஆகியோரிடம் பாலாஜி தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பாலாஜியை கையாலும், கல்லாலும் சரமாரியாக தாக்கியது. இதனால் வலி தாங்காமல் பாலாஜி அந்த கும்பலிடமிருந்து தப்பித்து ஓடினார்.
ஆனால் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி பாலாஜியை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். இந்த தாக்குதலில் பாலாஜி ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரது தந்தை ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாலாஜியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அவரது தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை தாக்கி கத்தியால் குத்திய கும்பலை தேடி வருகின்றனர்.






