என் மலர்
புதுச்சேரி

தந்திராயன்குப்பம் மீனவர்கள் கருப்பு கொடி ஏந்திஉண்ணாவிரத பேராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
தந்திராயன்குப்பம் மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
- மீனவ மக்களும் மீன் விற்பனை செய்வதால் அவர்களுக்குள் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
- மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்குள் செல்லாமல் அந்தப்பகுதியில் சாகும் வரை கருப்புக் கொடி ஏந்தி உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டகுப்பம் அருகே தந்திராயன்குப்பம் மீனவ பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மீன்பிடி தொழிலை பிரதானமாக செய்து அவர்கள் படகை தங்களுடைய பகுதியில் நிறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பக்கத்து மீனவர் பகுதியான சின்னமுதலியார்சாவடி மீனவர்கள் அவர்களது பகுதியில் படகை நிறுத்த இடம் இல்லை எனக் கூறி தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியில் படகுகளை நிறுத்தி வருகின்றனர்.
இதனால் தந்திராய்குப்பம் மீனவர்களுக்கு இடம் பற்றாக்குறை உள்ளதாகவும் தந்திராயன் குப்பம் பகுதியில் இரண்டு மீனவ மக்களும் மீன் விற்பனை செய்வதால் அவர்களுக்குள் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் படகு நிறுத்த இடம் இல்லாததாலும், பக்கத்து மீனவ கிராம மக்கள் இங்கு வந்து மீன் விற்பனை செய்வதால் தங்களுக்கு பொருளாதாரம் பாதிப்பு ஏற்படுவதாகவும் உடனே சந்திராயன் குப்பம் பகுதியில் உள்ள சின்ன முதலியார் சாவடி மீனவ படகுகளை அப்புறப்படுத்த வேண்டும் என கூறி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்திராயன்குப்பம் மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்குள் செல்லாமல் அந்தப்பகுதியில் சாகும் வரை கருப்புக் கொடி ஏந்தி உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தந்திராயன் குப்பத்தில் உள்ள சின்ன முதலியார் சாவடி மீனவ படகுகளை உடனடியாக அகற்றாவிட்டால் தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் அறிவித்த நிலையில் அங்கு கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அங்கு வானூர் தாசில்தார் நாராயணமூர்த்தி, கடலோர காவல் படை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனால் தந்திராயன் குப்பம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






