search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் தரமற்ற மருந்து சப்ளை செய்து ரூ. 44 லட்சம் மோசடி: அரசு மருந்தாளுநர், அதிகாரிகள் மீது வழக்கு
    X

    புதுச்சேரியில் தரமற்ற மருந்து சப்ளை செய்து ரூ. 44 லட்சம் மோசடி: அரசு மருந்தாளுநர், அதிகாரிகள் மீது வழக்கு

    • சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு பரிந்துரைத்தார்.
    • நடராஜன் வேறு எந்தந்த மருந்துகள் சப்ளை செய்தார்? அவர், இந்த டெண்டர்களை எடுக்க யார் உதவியது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் தேசிய சுகாதார இயக்கம் (என்.ஆர்.எச்.எம்.,) மூலம் கடந்த 2019-ம் ஆண்டு, புதுவை கர்ப்பிணிகளுக்கான சத்து மாத்திரை மற்றும் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ மருந்து கொள்முதல் செய்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்டது.

    இந்த மருந்தை சாப்பிட்ட கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அனைத்து மருந்துகளும் திரும்ப பெற்று, ஆய்வுக்கு உட்படுத்தி சுகாதாரத்துறை விசாரணை நடத்தியது. அதில் மருந்துகள் தரமற்றது என்பது தெரியவந்தது.

    தொடர் விசாரணையில், தேசிய சுகாதார இயக்கத்தில் (என்.ஆர்.எச்.எம்.,) ஒப்பந்த அடிப்படையில் மருந்தாளுநராக பணியாற்றிய நடராஜன், அவரது மனைவி பத்மா பெயரில் பத்மஜோதி எண்டர்பிரைசஸ், நண்பர் பெயரில் சாய்ராம் ஏஜென்சி என்ற இரு கம்பெனிகளை உருவாக்கி, என்.ஆர்.எச்.எம்., மூலம் விடப்பட்ட டெண்டரில் இந்த இரு கம்பெனிகள் மட்டும் பங்கேற்க செய்துள்ளார்.

    இந்த 2 கம்பெனிகளும் குறைந்த விலைக்கு மருந்து சப்ளை செய்வதாக கூறி டெண்டர் எடுத்து, தரமற்ற மருந்துகளை சப்ளை செய்து ரூ.44 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. அதனையொட்டி, நடராஜன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதுகுறித்து அப்போதைய சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, நடராஜனை தேடி வருகின்றனர்.

    மேலும், நடராஜன் வேறு எந்தந்த மருந்துகள் சப்ளை செய்தார்? அவர், இந்த டெண்டர்களை எடுக்க யார் உதவியது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×