search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் ஆன்லைனில் முதலீடு ஆசை காட்டி என்ஜினீயரிடம் ரூ.12 லட்சம் மோசடி
    X

    கோப்பு படம்

    புதுச்சேரியில் ஆன்லைனில் முதலீடு ஆசை காட்டி என்ஜினீயரிடம் ரூ.12 லட்சம் மோசடி

    • ராமகிருஷ்ணன் பல்வேறு தவணைகளாக ரூ.11 லட்சத்து 95 ஆயிரம் முதலீடு செய்தார்.
    • பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ராமகிருஷ்ணன் புதுவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 25). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.

    இவரது வாட்ஸ்அப்பில் கடந்த மாதம் 2-ந்தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில் பகுதிநேர வேலை செய்தால் அதிகமாக சம்பாதிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு ராமகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்தார்.

    மேலும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராமகிருஷ்ணன் பதிலும் அளித்தார். உடனே அவரது வங்கி கணக்கிற்கு ரூ.150 அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சோபி என்ற பெண் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். பின்னர் அவரை இன்ஸ்டாகிராம் குழுவில் இணையுமாறு கூறினார். தொடர்ந்து ராமகிருஷ்ணனும் அந்த குழுவில் இணைந்தார்.

    பின்னர் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதன் மூலம் அவருக்கு ரூ.650 கிடைத்தது. இந்த நிலையில் சோபி அவரை தொடர்பு கொண்டு நீங்கள் பணம் முதலீடு செய்து நாங்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளித்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறினார்.

    இதனை நம்பிய ராமகிருஷ்ணன் பல்வேறு தவணைகளாக ரூ.11 லட்சத்து 95 ஆயிரம் முதலீடு செய்தார்.

    இதன் மூலம் அவரது வங்கி கணக்கில் ரூ.14 லட்சத்து 54 ஆயிரத்து 228 இருப்பதாக காண்பித்தது. அதனை அவர் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை.

    இதனை தொடர்ந்து அவர் சோபியை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர் இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த சோபி என்ற பெண்ணை வலைவீசி தேடிவருகிறார்.

    Next Story
    ×