என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொது இடத்தில் மது குடித்ததை கண்டித்த போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்- புதுவை ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட 3 பேர் கைது
    X

    பொது இடத்தில் மது குடித்ததை கண்டித்த போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்- புதுவை ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட 3 பேர் கைது

    • கூட்டமாக மது அருந்தியவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
    • மது அருந்திய நபரில் ஒருவர் போலீஸ் ஏட்டு மணிமாறனை தகாத வார்த்தையால் திட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் மற்றும் சண்முகபுரம் பகுதிகளில் உள்ள வெட்டவெளியில் மது பாட்டில்களை வாங்கி வந்து தினமும் பலர் கூட்டம் கூட்டமாக மது அருந்தி வருகின்றனர்.

    அந்தப் பகுதியில் மது குடிப்பதால் மது அருந்துபவர்களுக்குள் அடிக்கடி மோதல் மற்றும் சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் மாந்தோப்பு சுந்தர் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு அங்கு மது அருந்துபவர்களை புதுவை மற்றும் தமிழக போலீசார் விரட்டி விடுகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை ஆரோவில் குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு மணிமாறன், மற்றொரு போலீஸ்காரர் தங்கமணி ஆகிய இருவரும் சாதாரண உடையில் புதுவையையொட்டி உள்ள தமிழக பகுதியான பூத்துறை பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு கூட்டமாக மது அருந்தியவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    ஆனால் மது அருந்திய நபரில் ஒருவர் போலீஸ் ஏட்டு மணிமாறனை தகாத வார்த்தையால் திட்டினார்.

    மேலும் நான் யார் என்று தெரியுமா என கூறி ஏட்டு மணிமாறனின் செல்போனை பறித்தார். உடனே மணிமாறன் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து போலீசாரை வரவழைத்தார்.

    இதற்கிடையில் மது அருந்திய நபர் ஏட்டு மணிமாறனை சரமாரியாக தாக்கினார். மேட்டுப்பாளையம் போலீசார் வந்தவுடன் அங்கு மது அருந்திய 3 பேரையும் வாகனத்தில் ஏற்றி ஆரோவில் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    அவர்களிடத்தில் நடத்திய விசாரணையில் தலைமை காவலர் மணிமாறனை தாக்கியது காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஊர் காவல் படை வீரராக பணியாற்றும் முனுசாமி என்பதும் மற்றொருவர் கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஊர் காவல் படைவீரராக பணியாற்றும் வசந்த் என்பதும் இவர்களுடன் மது அருந்திய மற்றொருவர் பெட்ரோல் பங்க் ஊழியர் பார்த்திபன் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ஊர்க்காவல் படை வீரர் முனுசாமி தாக்கியதில் முதுகு பக்கத்தில் உள் காயம் ஏற்பட்ட ஏட்டு மணிமாறன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் ஏட்டு மணிமாறனை ஊர்க்காவல் படை வீரர் முனுசாமி தாக்கிய சம்பவம் வீடியோவாக சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.

    Next Story
    ×