என் மலர்
புதுச்சேரி

புதுவை பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு பஸ்கள் இயக்காததால் நள்ளிரவில் பயணிகள் சாலை மறியல்
- புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
- 3 மணி நேரத்திற்கு மேலாக பஸ்கள் இல்லாமல் காத்திருப்பதாக தெரிவித்து போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
ஆனால் இரவு 11.30 மணிக்கு மேலும் பஸ் எதுவும் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் நிலையம் எதிரே மறைமலை அடிகள் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது பயணிகள், தாங்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக பஸ்கள் இல்லாமல் காத்திருப்பதாக தெரிவித்து போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களை போலீசார் சமாதானம் செய்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






