search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தரையில் படுக்க வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை- புதுவை அரசு ஆஸ்பத்திரியில் கவர்னர் தமிழிசை திடீர் ஆய்வு
    X

    தரையில் படுக்க வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை- புதுவை அரசு ஆஸ்பத்திரியில் கவர்னர் தமிழிசை திடீர் ஆய்வு

    • சர்க்கரை வியாதி இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது.
    • சிட்டி வழிமுறைகள், நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திராகாந்தி அரசு பொது மருத்துவ மனையில் நீரழிவு நோய்க்கான சிறப்பு வெளிப்புற சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

    இதை கவர்னர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, கண்காணிப்பாளர் செவ்வேள், துணை இயக்குனர் ரகுநாதன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாபன், மக்கள் தொடர்பு அதிகாரி ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுவையில் பெருகிவரும் நீரழிவுநோயை கட்டுப்படுத்தவும், இருதயநோய், நரம்பியல் நோய்கள், பக்கவாதம், சிறுநீரக செயலிழிப்பு தடுக்கவும், நீரழிவு நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் இந்த சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    இதை தொடங்கி வைத்த பின் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    சர்க்கரை வியாதி இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. புதுவையில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ளதாக ஒரு ஆய்வு கூறியுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறையை ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்.

    சர்க்கரை நோயாளிகளுக்கு தனிப்பிரிவு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கென தனிப்பிரிவு தொடங்கப்படும். புதுவை சுகாதாரத்துறையை மேம்படுத்த தேவையான கருவிகள் வாங்கப்பட்டு வருகிறது. நோயாளிகள் தரையில் பாயில் படுப்பதாக ஒரு தகவல் வந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தேன்.

    அப்போது அதிகாரிகள், நாங்கள் யாரையும் படுக்கை இல்லை என திருப்பி அனுப்புவதில்லை. படுக்கை கொள்ளளவை விட அதிக நோயாளிகள் வருகின்றனர் என தெரிவித்தனர். வரும் நோயாளிகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். மக்கள் அதிக நேரம் காத்திருக்கக் கூடாது. தேவையான கருவிகள் வாங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.

    தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். மாநில மாணவர்கள் உரிமைகள் பறிக்கப்படாது என்பதில் சந்தேகமில்லை. எந்த முறையில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது? என முழு விபரத்தை கேட்டுள்ளேன். நீட் அமுல்படுத்தப்பட்ட போதும் இடஒதுக்கீடு பறிபோகும் என குற்றம் சாட்டினர்.

    ஸ்மார்ட்சிட்டி திட்டம் வெளிப்படையாக நடக்கிறது. கடந்த ஆட்சியில் தாமதமாக நடந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பே பணிகள் முடிந்திருக்க வேண்டும். எங்களின் முயற்சியில் தற்போது அடுத்த ஆண்டு வரை ஸ்மார்ட் சிட்டி திட்ட காலத்தை நீட்டித்துள்ளோம்.

    இத்திட்டத்தில் எந்த குறைபாடும் இல்லை. ஸ்மார்ட் சிட்டி வழிமுறைகள், நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளோம். காலதாமதம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு விரைவாக பணிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. லஞ்சம், ஊழலை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். நானே விசாரணைக்கு உத்தரவிடுவேன். தற்போது வரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் எந்த குறைபாடும் இன்றி நடந்து வருகிறது.

    அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு அனுமதி கிடைத்துவிடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

    எதிர்கட்சித் தலைவர் சிவா மாணவர் சேர்க்கை ரத்துக்கு அரசு பொறுப் பேற்க வேண்டும் என கூறியுள்ளார்.

    தமிழ்நாட்டிலும்தான் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுவாக குற்றம்சாட்டாமல் மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவோம்.

    நோயாளிகளை பாயில் படுக்க வைத்து சிகிச்சை அளிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இங்கு இடமில்லை என்றால், அரசு மருத்துவக் கல்லூரிக்கு நோயாளிகளை அனுப்பிவையுங்கள் என தெரிவித்துள்ளேன். அவசர பிரிவுக்கு ரூ.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவசரகால சிகிச்சை பிரிவுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். அதிகளவு நோயாளிகள் தமிழ்நாட்டில் இருந்துதான் வருகின்றனர். வேறுபாடு பார்ப்பதில்லை. அவர்களுக்கும் பாகுபாடின்றி சிகிச்சை அளித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×