search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் உள்பட 2 பேர் பலி
    X

    புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் உள்பட 2 பேர் பலி

    • கிருமாம்பாக்கம் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
    • புதுவையில் கடந்த ஆண்டு 1,673 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

    இந்த மாதத்தில் தினந்தோறும் சராசரியாக 11 பேர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு மாதமாக டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கம், பனித்திட்டு, பிள்ளையார்குப்பம், ஈச்சங்காடு உள்ளிட்ட கிராமங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    கிருமாம்பாக்கத்தை அடுத்த பனித்திட்டு ஆலடிமேடு கிராமத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் பூங்காவேல் (வயது 53) என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

    அவர் புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுபோல் நேற்று முன்தினம் ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த ஜானகி (62), மற்றும் அவரது கணவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் ஜானகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருமாம்பாக்கம் பகுதியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தடுத்து 2 பேர் பலியானது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து கிருமாம்பாக்கம் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

    புதுவையில் கடந்த ஆண்டு 1,673 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 1,724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×