search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மோதல்-பதட்டம்: 3 பேர்  காயம்
    X

    புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மோதல்-பதட்டம்: 3 பேர் காயம்

    • ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் சுரேந்தர் மற்றும் அவரது நண்பர்களையும் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
    • படுகாயம் அடைந்த 3 பேரும் அருகில் உள்ள பாகூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

    பாகூர்:

    புதுவை அடுத்த பாகூர் தாமரைகுளம் வீதியை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று பாகூர் முருகன் கோவிலில் இருந்து குருவிநத்தம் வழியாக மோட்டார் சைக்கிளில் பாகூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பாகூரில் தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. மண்டபத்திற்கு வந்திருந்த சிலர் போக்குவரத்து இடையூறாக வாகனங்களில் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது சுரேந்தர் இது குறித்து அவர்களிடம் ஏன் இடையூறு செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு நீ யாருடா எங்களைக் கேட்கிறாய் என்று கேட்டு சுரேந்தரை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து சுரேந்தர் அவரது நண்பரான கோகுல் மற்றும் சேகருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த சுரேந்தர் நண்பர்கள் அவரை தாக்கியவர்கள் யார் பிரச்சனை எப்படி ஏற்பட்டது என்று கேட்டுள்ளனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் சுரேந்தர் மற்றும் அவரது நண்பர்களையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் இது போல் கேள்வி கேட்டால் உங்களை வெட்டி கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    படுகாயம் அடைந்த 3 பேரும் அருகில் உள்ள பாகூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

    சேகர் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பாகூர் இளைஞர்கள் மத்தியில் தீயாக பரவியது. உடனே 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தனியார் திருமண மண்டபத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருமண மண்டபத்தின் கேட்டை இழுத்து பூட்டினர். பின்னர் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் அவர்கள் அதை மறுத்தனர். பின்னர் தகவல் அறிந்த தெற்கு பகுதி எஸ்.பி பக்தவச்செல்வம் சப்- இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், நந்தகுமார் ஆகியோர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பின்னரே அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    படுகாயம் அடைந்த சுரேந்தர் இது குறித்து பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் பாகூர் பகுதியில் நள்ளிரவு 3 மணி நேரம் பதட்டமாக காணப்பட்டது மேலும் பாகூர் பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    திருமண நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் மணமக்களை மண்டபத்திலிருந்து போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். மேலும் திருமணத்திற்காக வாங்கி வைக்கப்பட்ட சீர்வரிசை பொருட்களை போலீசார் தனியார் வாடகை வண்டியை வரவழைத்து போலீசாரே அதனை ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×