search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சமூக அமைப்புகள் போராட்டம்
    X

    சமூக அமைப்பினர் சாவக்கர் உருவபடத்தை எரித்து போராட்டம் நடத்திய காட்சி.

    சமூக அமைப்புகள் போராட்டம்

    • புதுவையில் அமைக்கப்பட்டு வரும் தியாக சுவரில் கவர்னர் தமிழிசை சாவர்க்கர் பெயரை பதித்துள்ளார்.
    • சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்திற்கு எவ்வித பங்களிப்பும் செய்யவில்லை

    புதுச்சேரி:

    புதுவையில் அமைக்கப்பட்டு வரும் தியாக சுவரில் கவர்னர் தமிழிசை சாவர்க்கர் பெயரை பதித்துள்ளார்.

    சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்திற்கு எவ்வித பங்களிப்பும் செய்யவில்லை. அவர் சிறையில் இருந்த போது ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர் என கூறி அவரது பெயரை நீக்க வேண்டும் என வலியுறுத்தி சமூக அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி காந்தி வீதி சின்ன மணிக்கூண்டு அருகே சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் திரண்டனர். தமிழர் களம் செயலாளர் அழகர், திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் மங்கையர்செல்வன், திராவிடர் கழகத் தலைவர் சிவ வீரமணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் வீரமோகன், எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுச்செயலாளர் அப்துல்லா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் அனிப்பா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொறுப்பாளர் பரகத்துல்லா, தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பிரகாஷ், ராஜா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் ஸ்ரீதர், யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன்.

    தமிழ் தேசிய பேரியக்கப் பொறுப்பாளர் வேல்சாமி, மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கப் பொதுச்செயலாளர் முருகானந்தம், பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் தீனா, பீ போல்ட் அமைப்புத் தலைவர் பஷீர், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர் ரமேஷ், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் பாவாடைராயன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி தலைவர் கலைப்பிரியன், சுற்றுச்சூழல் கலாச்சாரப் புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் சாந்தகுமார், பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கடற்கரை சாலை நோக்கி சென்றனர். அவர்களை புஸ்சி வீதி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் அருகே போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர்.

    ஆனால் தடுப்புகளின் மீது ஏறி நின்று போராட்டக்குழுழுவினர் போராட்டம் நடத்தினர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் லேசான தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து சாவர்க்கர் படத்துக்கு அவமரியாதை செய்த குழுவினர் சாவர்க்கர் உருவப்படத்தை தீயிட்டு எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சாவர்க்கர் பெயரை தியாக சுவரில் இருந்து நீக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×