search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சைபர் குற்றங்களுக்கு தனி போலீஸ் நிலையம்-  முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்
    X

    சைபர் குற்றங்களுக்கான தனி போலீஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்த காட்சி. 

    சைபர் குற்றங்களுக்கு தனி போலீஸ் நிலையம்- முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்

    • புதுவையில் செல்போன், இணையதளம், செயலிகள் மூலம் பணம் அனுப்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • இதற்காக 4 ஆயிரம் சதுர அடியில் 3 மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் செல்போன், இணையதளம், செயலிகள் மூலம் பணம் அனுப்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    அதேநேரத்தில் சைபர் கிரைம் எனப்படும் இணையதள குற்றங்களும் அதிகரித்துள்ளது. ஏ.டி.எம்.

    கார்டு புதுப்பிப்பதாக கூறி, மொபைல் அல்லது லேண்ட் லைனில் அழைத்து ஓ.டி.பி. பெறுகின்றனர்.

    இதில் வங்கி விவரங்களை பெற்று பணத்தை திருடுகின்றனர். பிரபல நிறுவனத்தில் 50 சதவீத தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம் என ஆசைவார்த்தை கூறியும் பணம் பறிக்கின்றனர்.

    இதுபோல பல்வேறு செயலிகள் மூலம் குற்றங்கள் நடக்கிறது. அமைச்சர்கள் பெயரிலேயே முகநூலில் பதிவிட்டு பணம் பறிக்கவும் முயற்சித்துள்ளனர். படிக்காதவர்களை விட படித்தவர்கள் பலரும் இதில் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே சைபர் குற்றங்களை தடுக்க தனி போலீஸ் நிலையம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

    இதன்படி கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் புதுவையின் முதல் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டது.

    இதற்காக 4 ஆயிரம் சதுர அடியில் 3 மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் குத்துவிளக்கேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், டி.ஜி.பி. மனோஜ்குமார்லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், ஐ.ஜி. சந்திரன் மற்றும் போலீசார் பலர் கலந்துகொண்டனர்.

    ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. பிரிவின் கீழ் சைபர் கிரைம் பிரிவு செயல்பட்டு வந்தது. இனிமேல் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் தனியாக வழக்குகள் பதிவு செய்யப்படும். சைபர் போலீஸ் நிலையத்தில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 இன்ஸ்பெக்டர்கள், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 12 போலீசார் முதல்கட்டமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சைபர் குற்றங்கள் மூலம் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். புதிய சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கு குற்றங்களை கண்டறிய ரூ.2 கோடி மதிப்பிலான அதி நவீன கருவிகளும் வாங்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×