என் மலர்
புதுச்சேரி

பொதுக்கூட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு தி.மு.க.அமைப்பாளர் சிவா, திண்டுக்கல் லியோனி ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.
1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என்பதை ஏற்க முடியாது
- எதிர்கட்சி தலைவர் சிவா பேச்சு
- 1996-ல் மாநில அந்தஸ்துக்கான தீர்மானத்தை அப்போதைய முதல்-அமைச்சர் ஜானகிராமன் கொண்டுவந்தார்.
புதுச்சேரி:
மங்கலம் தொகுதி தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொதுக்கூட்டம் அரியூர் அங்காளம்மன் கோவில் எதிரில் நடந்தது.
மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் சண்.குமரவேல் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் அசோக் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், பரமபதம், முருகதாஸ், அவைத்தலைவர் புஷ்பராஜ், மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் புதுவை மாநில தி.மு.க அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா பேசியதாவது:-
1996-ல் மாநில அந்தஸ்துக்கான தீர்மானத்தை அப்போதைய முதல்-அமைச்சர் ஜானகிராமன் கொண்டுவந்தார். பின்னர் டெல்லிக்கு எம்.எல்.ஏ.க்களை அழைத்து ெசன்று வலியுறுத்தினோம். ரங்கசாமி ஆட்சிக்கு வந்த பிறகு ஒருமனதாக அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இது டெல்லிக்கு சென்று பரிசீலனையில் இருப்பதாக நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.
பாராளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி எம்.பி. சுப்புராயன் கேள்வி கேட்டபோது, இதுபோன்ற தீர்மானம் வரவில்லை என்று பாராளுமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி சிவா எம்.பி. உட் பட பலர் பேசினார்கள். ஆனால் இதற்கு எழுத்துப்பூர்வமான பதில் வரவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது.
விவசாயிகளுக்கு தனியாக ஒரு மின் பாதை பணி நடைபெற உள்ளது. அப்படி நடந்தால் அவர்களுக்கு எப்பொழுது தோன்றுகிறதோ அப்பாதுதான் மின்சாரம் கொடுப்பார்கள்.
அது நள்ளிரவாகக்கூட இருக்கலாம். இது நடக்க கூடாது என எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது. புதுவை மாநிலத்தில் பல கார்ப்பரேஷன்களில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. 11 கார்ப்பரேஷன்களை மூடிவிட்டனர்.
இங்கு மிக மோசமான பாவப்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களை ஏமாற்றக் கூட கூடிய செயல்களை செய்ய வேண்டாம். தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதுவையில் 1-ம் வகுப்பு 10-ம் வகுப்பு வரை அரசு பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு தான் மருத்துவக் கல்லூரியில் 10 சதவீத இட ஒதுக்கி வழங்கப்படும் என கூறுகிறார். இது ஏற்கத்தக்கதல்ல. எற்கனவே படிக்கும் குழந்தைகளுக்கு எப்படி சீட் கிடைக்கும்.?
இவ்வாறு சிவா பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோணி சிப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
உளுந்தே வாங்காமல் ஆயிரம் வடை சுடக்கூடிய திறமை பிரதமர் மோடியால் மட்டுமே முடியும். மங்களம் என்றால் நல்ல காரியத்தை தொடங்குவதற்காக கூறுவது. வரும் பாராளுமன்ற தேர்தலில் மதவெறி பிடித்த பாஜகவை இந்தியாவைவிட்டு விரட்டி இந்தியா எனும் மதச்சார்பற்ற கூட்டணியின் தலைமையில் ஆட்சி நடக்கப்போகிறது என்பதற்கு மங்களம் சொல்லும் தொகுதியில் இந்த கூட்டம் நடக்கிறது.
புதுவையில் கருப்பு, சிகப்பு கொடியுடன் உதயசூரியன் உதிக்கப் போகிறது என்பதற்கான அடையாளமாக இந்த மங்களம் தொகுதி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுக்கூட்டத்தில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், முன்னாள்
எம்.பி., திருநாவுக்கரசு, எம்.எல்.ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் மாநில நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






