search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    செயற்கையான சூழ்ச்சிகளால் நம்மை பிரிக்க முடியாது- சுதந்திர தின உரையில் ரங்கசாமி உறுதி
    X
    போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏற்றுக்கொண்ட காட்சி.

    செயற்கையான சூழ்ச்சிகளால் நம்மை பிரிக்க முடியாது- சுதந்திர தின உரையில் ரங்கசாமி உறுதி

    • சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய விடுதலை வீரர்களின் தியாகத்தால் அடிமை விலங்கை உடைத்தெறிந்தோம்.
    • தேசத்தின் மாண்பை கட்டிக்காக்கும் பெருமைக்குரிய எல்லா தருணங்களிலும் புதுவை எப்போதும் முன்னணியில் இருந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்றி முதல்-அமைச்சர் ரங்கசாமி உரையாற்றினார்.

    அவர் ஆற்றிய உரையின் முக்கியம்சங்கள் வருமாறு:-

    நாடு முழுவதும் அமுத பெருவிழாவை கொண்டாடி வரும் இத்தருணத்தில் 75 ஆண்டுக்கு முன் நம் தேசம் இருந்த நிலையை எண்ணிப்பார்க்கிறேன். தங்களை தாங்களே ஆண்டுகொள்ளும் திறமை இந்தியர்களுக்கு இல்லை என்றும், ஆங்கிலேயர் ஆட்சி மறைந்தால் அவர்கள் உருவாக்கிய முற்போக்கு நாகரீம் ஓர் இரவில் அழிந்துவிடும் என்றும் விடுதலைக்கு முன்பு நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் கூறினார்கள்.

    சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய விடுதலை வீரர்களின் தியாகத்தால் அடிமை விலங்கை உடைத்தெறிந்தோம். நம் உணர்வில் ஊறிய தேசபக்தியால் இந்திய திருநாட்டை தனித்தன்மை மிக்க நாடாக உலகரங்கில் உயர்த்தியுள்ளோம்.

    வேற்றுமையில் ஒற்றுமை என்ற மந்திர சொல் நம்மிடையே சமுதாய கூட்டுறவை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டுறவினால்தான் எந்த ஒரு கற்பனையாலும், செயற்கையான சூழ்ச்சியாலும் பிரிக்கவோ, பிளக்கவோ முடியாத ஒரு பொது சாதனையாக இந்தியாவை வளமாக்கியுள்ளோம்.

    நாடு சுதந்திரம் பெறுவதற்காக தன் இன்னுயிரை ஈந்து அரும்பாடுபட்ட ஆயிரக்கணக்கான விடுதலை வீரர்களின் வீர தியாகத்தையும், நாட்டை உலகரங்களில் ஒப்பற்ற நாடாக உயர்த்த அயராது பாடுபட்ட தேச தலைவர்களையும் நன்றியோடு நினைத்து போற்றுவது நம் அனைவரின் கடமையாகும்.

    அதனடிப்படையில்தான் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இல்லம்தோறும் தேசியக்கொடி ஏற்றி உள்ளம்தோறும் தேச பக்தியை வெளிப்படுத்தினோம். தேச பக்தி என்பது நம் ஒவ்வொருவரின் உணர்விலும், கலந்தது என்பதை பெருமிதத்தோடு உலகிற்கு உணர்த்தியுள்ளோம்.

    தேசத்தின் மாண்பை கட்டிக்காக்கும் பெருமைக்குரிய எல்லா தருணங்களிலும் புதுவை எப்போதும் முன்னணியில் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாது, வளர்ச்சியில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறது. அந்த சாதனையை எமது அரசு எப்போதும் போல முன்னெடுத்துச்செல்வதில் பெருமிதம் கொள்கிறது.

    புதுவை மக்களின் ஏகோபித்த ஆதரவோடு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை புதுவையில் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியோடு, பொறுப்பேற்ற எனது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த ஓராண்டில் ஆக்கப்பூர்வமான பல வளர்ச்சி பணிகளை செய்துள்ளது.

    விவசாயிகளின் வருமானத்தை பெருக்க சீர்மிகு வேளாண்மைக்கு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

    அனைத்து சுகாதார வசதிகளும் மக்களுக்கு எளிதாக கிடைக்க முனைப்போடு செயல்பட்டு வருகிறோம். கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதியும், நிதியும் மத்திய அரசிடம் கோரியுள்ளோம். பள்ளி, கல்லூரி தரவரிசையில் புதுவை 4-ம் இடத்தில் உள்ளது.

    ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக 12 திட்டங்களும், அந்த சமுதாய மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த 12 திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.மீன் உற்பத்தியை பெருக்கவும், மீனவர் நலனை மேம்படுத்தவும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செம்மையாக செயல்படுத்தி வருகிறது.

    மகளிர் முன்னேற்றத்திற்காக ஒருங்கிணைந்த பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நிலமற்ற ஏழை மக்களுக்கு கடந்த ஓராண்டில் 115 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இலவச அரிசி திட்டத்தின் நேரடி பண பரிமாற்றம் மூலம் அரிசிக்கு பதிலாக பணமாக மானியத்தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகு சுற்றுலா, விருந்தோம்பல் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.

    பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான தளத்தை விரிவுபடுத்த தமிழக பகுதியிலிருந்து 395 ஏக்கர் நிலமும், புதுவை பகுதியில் 30 ஏக்கர் நிலமும் கையகப்படுத்த வேண்டும்.

    இதற்காக ரூ.425 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம். இத்திட்டம் நிறைவேறும்போது உலக வரைபடத்தில் புதுவை ஒரு முக்கிய இடத்தை பெறும். மாநில அமைதிக்கு மகத்தான காவல்சேவையை அரசு வழங்கி வருகிறது. காவலர் பணியிடங்கள் வெளிப்படையாக, நேர்மையாக நிரப்பப்பட்டுள்ளன.

    அரசு எந்திரம் தொய்வின்றி இயங்க அரசு ஊழியர்கள் நலனிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். 7-வது ஊதியக்குழு சம்பளம், நிலுவைத்தொகை, காலகட்ட பதவி உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை வழங்கியுள்ளோம். மக்களின் நலன் கருதியும், மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்லவும் எனது அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வரும்காலத்திலும் இதுபோன்ற புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு முனைப்பாக உள்ளது. மீண்டும் ஒரு முறை மாநில மக்கள் அனைவருக்கும் என் உளம்நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க பாரதம், வளர்க புதுவை மாநிலம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×