என் மலர்
புதுச்சேரி

புறநோயாளிகள் பிரிவில் அலைமோதிய நோயாளிகள் கூட்டம்.
புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அலைமோதிய நோயாளிகள்
புதுச்சேரி:
புதுவை அரசு பொது ஆஸ்பத்திரி சட்டமன்றம் அருகில் செயல்பட்டு வருகிறது.
இங்கு நகர பகுதி, கிராம பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையை சுற்றியுள்ள தமிழக பகுதியான கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் இருந்தும் அரசு பொது ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர்.
ஒரு நாளைக்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர். வெளிப்புற சிகிச்சை பிரிவில் 5 கவுன்டர்களில் உள்ள கணினியில் திடீரென சர்வர் பழுதானது.
இதனால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் சீட்டு பதிய முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகினர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்தும் பதிய முடியவில்லை. ஊழியர்கள் கையால் எழுதி தந்ததால் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் வெளிப்புற சிகிச்சை பிரிவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நாள்தோறும் காலை 8 மணிக்கு வெளிப்புற சிகிச்சை பிரிவில் சீட்டு பதிவு தொடங்கும். 10:30 மணிக்கு சீட்டு பதிவு நிறுத்தப்படும்.
சர்வர் பிரச்சனை காரணமாக சுமார் 3 மணி நேரமாக ஆன்லைன் சீட்டு பதிய முடியாமல் காலதாமதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக 11 மணி வரை கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு சர்வர் பழுது நீக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.






