search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கடைகளை காலி செய்ய மறுத்து புதுச்சேரி பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்- சட்ட சபையை நோக்கி ஊர்வலம்
    X

    கடைகளை காலி செய்ய மறுத்து புதுச்சேரி பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்- சட்ட சபையை நோக்கி ஊர்வலம்

    • பெரியமார்க்கெட் வியாபாரிகளை அங்கிருந்து தற்காலிகமாக ரோடியர் மில் திடலுக்கு இடமாறும்படி நகராட்சி அறிவித்திருந்தது.
    • மீன் அங்காடி பெண் வியாபாரிகளும் பங்கேற்றனர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.

    புதுச்சேரி:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுவை நகரத்தின் மைய பகுதியில் உள்ள பெரியமார்க்கெட் என அழைக்கப்படும் குபேர் அங்காடி புதிதாக கட்டப்பட உள்ளது.

    50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பெரியமார்க்கெட்டில் இட நெருக்கடி இருந்து வந்த நிலையில், அடிப்படை வசதிகளும் இல்லாததால் அதை நவீனமுறையில் புதிதாக கட்ட அரசு தீர்மானித்துள்ளது.

    இதனால் பெரியமார்க்கெட் வியாபாரிகளை அங்கிருந்து தற்காலிகமாக ரோடியர் மில் திடலுக்கு இடமாறும்படி நகராட்சி அறிவித்திருந்தது.

    இதற்கு பெரியமார்க்கெட்டில் உள்ள நிரந்தர மற்றும் அடிக்காசு, மீன் அங்காடி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடைகளை காலி செய்யாமல், தேவையான சீரமைப்பு பணிகளை பகுதி, பகுதியாக நிறைவேற்றித்தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் 4 மணி நேரம் கடைகளை அடைத்து பெரியமார்க்கெட் அனைத்து வியபாரிகளும் ஒன்றிணைந்து சாய்பாபா திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தினர்.

    இந்த கூட்டத்தில், பெரியமார்க்கெட்டை இடமாற்றம் செய்யக்கூடாது என தீர்மானமும் நிறைவேற்றினர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பெரியமார்க்கெட்டில் உள்ள கடைகளில் நகராட்சி சார்பில் ஒரு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

    அந்த அறிவிப்பில், புதுவை நகராட்சிக்கு சொந்தமான குபேர் அங்காடியில் வியாபாரம் செய்யும் அனைத்து வகையான வணிகர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு அறிவிப்பது என்னவென்றால், தற்போது பழுதான நிலையில் உள்ள குபேர் அங்காடி வளாகத்தை புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் தேசிய கட்டிட கட்டுமான கழகத்தால் மறுகட்டுமானம் செய்யும் பணி விரைவில் தொடங்க புதுவை அரசு தீர்மானித்துள்ளது.

    அந்த பணி முடிவடைந்தவுடன் தற்போது கடை ஒதுக்கீடு பெறப்பட்ட அனைத்து வகை வியாபாரிகளுக்கும் நகராட்சி விதிகளுக்கு உட்பட்டு புதிய ககைடள் மறு ஒதுக்கீடு செய்து தரப்படும்.

    ஆகவே விரைவில் தொடங்க உள்ள கட்டுமான பணிக்கு ஏதுவாக தற்போது குபேர் அங்காடியில் இயங்கி வரும் அனைத்து வகை கடைகளும் (மீன் அங்காடி தவிர்த்து) புதுவை கடலூர் சாலையில் உள்ள ரோடியர் மில் வளாகத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்ய அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அனைத்து வியாபாரிகளும் தங்கள் வியாபாரத்தை ரோடியர் மில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைக்கு மாற்றம் செய்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இன்று காலை இதனை பார்த்த வியாபாரிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். காலை 10.30 மணியளவில் பெரியமார்க்கெட் வியாபாரிகள் ஒன்றுகூடி கடைகளை அடைத்து நேருவீதி-காந்தி வீதி சந்திப்பில் திரண்டனர்.

    இதில் மீன் அங்காடி பெண் வியாபாரிகளும் பங்கேற்றனர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.

    ஆனால் வியாபாரிகள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேரு வீதி வழியாக காமராஜர் சிலை சந்திப்புக்கு வந்தனர். அங்கு நாலாபுறமும் சாலை சந்திப்புகளில் அமர்ந்து வாகனங்களை செல்ல விடாமல் தடுத்து மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலால் அண்ணாசாலை, காமராஜர் சாலை, நேருவீதி சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. வாகனங்களில் வந்தவர்கள் அருகிலிருந்த சாலைகளின் வழியாக சென்றனர். வியாபாரிகள் சாலையின் மைய பகுதியில் அமர்ந்து கோஷம் எழுப்பி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நகராட்சி அறிவிப்பை வாபஸ் பெறும்வரை போராட்டத்தை தொடர்வோம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து அவர்கள் சட்டசபையை நோக்கி ஊர்வலமாக சென்றனர் இதனால் புதுவை நகரின் மைய பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    Next Story
    ×