என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
தொழில்நுட்ப பல்கலையில் பேராசிரியர்கள் உண்ணாவிரதம்
- மத்திய அரசு வழங்கிய ரூசோ நிதி ரூ.50 கோடியை பதிவாளர் தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- பேராசிரியர்கள் கோரிக்கையை நிறை வேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை பிள்ளைச்சா வடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி 2020-ம் ஆண்டு தொழில்நுட்ப பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டது.
உடனடியாக ஆட்சி மன்றக்குழு அமைக்கப்படாததால் பதிவாளர் காலி பணியிடங்களை நிரப்பவில்லை. மத்திய அரசு வழங்கிய ரூசோ நிதி ரூ.50 கோடியை பதிவாளர் தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றசாட்டுக்களை முன்வைத்து அவரை மாற்றக்கோரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
தொழில்நுட்ப பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு நடந்த போராட்ட த்துக்கு பேராசியர்கள் சங்கத்தின் செயலாளர் கல்பனா, துணை தலைவர் இளம்சேரலாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
போராட்டம் குறித்து செயலாளர் கல்பனா கூறியதாவது:-
தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திற்கு முழு நேர பதிவாளர் இல்லை. தற்போதைய பதிவாளர் அரைமணி நேரம் மட்டுமே பல்கலைக்கழகத்தில் உள்ளார். காலியாக உள்ள 140 பேராசிரியர் பணியிடங்கள், 300 ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்ப டாமல் உள்ளது.
இதனால் தேசிய அளவில் 34-வது இடத்தில் இருந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 200-ம் இடத்துக்கு வந்துவிட்டது. எனவே நிரந்தர பதிவாளரை நியமிக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 3 ஆயிரம் மாணவர்கள் படிக்க கூடிய தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் ஆட்சி மன்ற குழுவை கவர்னர், புதுவை அரசு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேராசிரியர்கள் கோரிக்கையை நிறை வேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.






