search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் சிறுமி கொலையை கண்டித்து "பந்த்": பேருந்துகள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு

    • சிறுமி படுகொலைக்கு நீதிக்கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம்.
    • போதைப்பொருகள் புழக்கத்தை தடுக்க தவறியதை கண்டித்தும் போராட்டம்.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

    புதுச்சேரியை உலுக்கிய இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதை மயக்கத்தில் வாலிபர் செய்த இந்த வெறிச்செயல், புதுச்சேரி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.

    சிறுமி கொலையை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆங்காங்கே போராட்டம், சாலை மறியல் நடத்தினர்.

    சிறுமி கொலையை கண்டித்தும், போதைப் பொருள் நடமாட்டத்தை புதுவையில் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் பந்த் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் இந்த பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பந்த் போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. பந்த் போராட்டத்தால் புதுச்சேரி புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் எதுவும் இயக்கப்பட வில்லை.

    புதுச்சேரியை பொறுத்தவரை தனியார் பஸ்கள்தான் அதிகளவில் இயக்கப்படுகிறது. அரசியல் கட்சியினர் கோரிக்கையை ஏற்று தனியார் நிறுவனத்தினர் பஸ்களை இயக்கவில்லை. அதோடு புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக பஸ்களும் இயக்கப்படவில்லை.

    தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லைகளில் பயணிகளை இறக்கி சென்றது. புதுச்சேரி வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடியது. பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். ஆட்டோக்கள், டெம்போக்களும் இயக்கப்படவில்லை.

    நகர பகுதியில் பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய பெட்டி கடைகள் வரை அடைக்கப்பட்டிருந்தது. நேருவீதி, அண்ணா சாலை, மறைமலைஅடிகள் சாலை, புஸ்சி வீதி, காமராஜர் சாலை, படேல் சாலை, திருவள்ளுவர் சாலை, மிஷன் வீதி ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    பெரிய மார்க்கெட், சின்னமணிக்கூண்டு, நெல்லித்தோப்பு மார்க்கெட் கடைகளும் இயங்கவில்லை. தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கின. பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

    போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தவர்கள் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்காக பள்ளி, கல்லூரி வாகனங்களை நிறுத்த மாட்டோம் என தெரிவித்திருந்தனர். இதன்படி பிளஸ்-2 தேர்வு எழுத மாணவர்களை அழைத்து செல்ல ஒரு சில தனியார் பள்ளி பஸ்கள் மட்டும் ஒடியது. பெரும்பாலான தேர்வு எழுதும் மாணவர்களை பெற்றோர் தங்கள் வாகனங்களில் அழைத்து சென்றனர்.

    தனியார் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கவில்லை என்றாலும் அவைகள் இயங்கவில்லை. அரசு பள்ளிகள் இயங்கினாலும் மாணவர்கள் வருகை குறைவாக இருந்தது. சேதராப்பட்டு, மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் ஒரு சில தொழிற்சாலைகளை தவிர பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தது.

    பந்த் போராட்டத்தையொட்டி நகர பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரெயில்நிலையம், பஸ்நிலையம் உட்பட மக்கள் கூடும் இடங்கள், முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் வியாபாரிகள், ஆட்டோ, டெம்போ, தனியார் பஸ் உரிமையா ளர்கள், தொழிற்சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவு தெரிவித்திருந்தனர். ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தால் புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×