என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பெயிண்டர் எலி மருந்து தின்று தற்கொலை
- விபத்தில் சிக்கி புத்தி சுவாதீனம் மாறியதால் நண்பர்கள் கிண்டல் செய்ததையடுத்து பெயிண்டர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
- அதற்காக சிகிச்சை பெற்றுவந்த விஜயகுமாருக்கு நாளடைவில் புத்தி சுவாதீனம் மாறி குழந்தை தனமாக பேசி வந்தார்.
புதுச்சேரி:
விபத்தில் சிக்கி புத்தி சுவாதீனம் மாறியதால் நண்பர்கள் கிண்டல் செய்ததையடுத்து பெயிண்டர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை கோரிமேடு காமராஜர் நகர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 39). இவருக்கு அனிதா என்ற மனைவியும் 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர்.
பெயிண்டர் வேலை செய்து வந்த விஜயகுமார் கடந்த ஆண்டு மேட்டுப்பாளையத்தில் நடந்த விபத்தில் சிக்கி தலையில் காயமடைந்தார். அதற்காக சிகிச்சை பெற்றுவந்த விஜயகுமாருக்கு நாளடைவில் புத்தி சுவாதீனம் மாறி குழந்தை தனமாக பேசி வந்தார். இதனை அவருடைய நண்பர்கள் கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜயகுமார் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்து வந்தார்.
மேலும் இது பற்றி விஜயகுமார் தனது தாய் மற்றும் குடும்பத்தினரிடம் கூறி தனக்கு வாழ பிடிக்க வில்லை என்று சொல்லி வருத்தப்பட்டு வந்தார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறிவந்தானர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று விரக்தி அடைந்த விஜயகுமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து எலி மருந்தை தின்று விட்டார்.
பின்னர் இது குறித்து தனது தாய் மற்றும் மனைவியிடம் விஜயகுமார் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக விஜயகுமாரை சிகிச்சைகாக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது தாயார் சரோஜா கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






