search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தமிழக-புதுச்சேரி எல்லையில் புதிய செயலி மூலம் ரவுடிகள் நடமாட்டம் கண்காணிப்பு
    X

    புதுவை-கடலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    தமிழக-புதுச்சேரி எல்லையில் புதிய செயலி மூலம் ரவுடிகள் நடமாட்டம் கண்காணிப்பு

    • போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தும் விதமாக கூட்டம் நடத்தப்பட்டது.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் மற்றும் புதுவையில் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை ஒருங்கிணைப்பு கூட்டம் கிருமாம்பாக்கம் பகுதியில் நடந்தது.

    கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா தலைமை தாங்கி பேசினர்.

    புதுவை மாநில போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், மோகன்குமார், ஜிந்தா கோதண்டராமன், செல்வம் வீரவல்லவன் கடலூர் மாவட்ட டி.எஸ்.பி.க்கள் பிரபு, சபியுல்லா, விஜயகுமார், நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கடலூர் மாவட்டம் மற்றும் புதுவை யூனியன் பிரதேச போலீசாருக்கு இடையேயான செயல்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்து விவாதித்தனர்.

    விவாதத்தில் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பகிர்தல்-சேகரித்தல், எல்லைச் சோதனைச் சாவடிகளில் விழிப்புடன் இருக்கும் போலீசார் மூலம் போலி மதுபானங்கள், கஞ்சா, புகையிலை பொருட்கள் போன்றவற்றை சட்ட விரோதமாக கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்துதல்.

    சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை பகிர்தல், குற்றத் தடுப்பு அம்சத்தில் கூட்டு ரோந்து, மாநிலங்களுக்கு இடையேயான போலீசார் குற்றப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு ஒருங்கிணைப்பு, எல்லை பகுதியில் ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணிப்பது என்பது குறித்து விவாதித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த கூட்டம் எல்லை பகுதியில் போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்டது. இரு புறத்தில் இருந்து வரக்கூடிய குற்ற நிகழ்வுகளை பரிமாறிக் கொள்வது. இதன் மூலம் பொதுமக்களை பாதுகாக்க முடியும். இரு மாநில எல்லை போலீசாரிடையே தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள வாட்ஸ் அப் செயலி ஏற்படுத்தப்படும்.

    இரு மாநில போலீசார் இடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். எல்லைப்புற போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசாரிடையே மாதம் தோறும் கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்து உள்ளதாக தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் எல்லைபுற போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு, குற்றப்பிரிவு, அமலாக்க பிரிவு போலீசார் என 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×