என் மலர்
புதுச்சேரி

புதுவையில் மதுபான விற்பனை வருவாய் ரூ.1,393 கோடியாக அதிகரிப்பு
- கடந்த 2017-2018ல் ரூ.769.96 கோடியாக இருந்த மதுபான வருவாய் ஆண்டுதோறும் உயர்ந்தது.
- சாராயக்கடைகள் மூலம் ரூ.100 கோடியும் கள்ளுக்கடைகள் மூலம் ரூ.1 கோடியும் கிடைத்து உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 496 மதுக்கடைகள், 95 சாராய கடைகள், 74 கள்ளுக்கடைகள் உள்ளது.
தற்போது மக்கள் எதிர்ப்பையும் மீறி அதிக அளவில் மது கடைகளும், ரெஸ்ட்ரோ பார்களும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த மதுபான கடைகளில் 30-க்கும் மேற்பட்ட பீர்வகைகள், 100-க்கும் மேற்பட்ட விஸ்கி வகைகள், 200-க்கும் மேற்பட்ட பிராந்தி வகைகள், 30-க்கும் மேற்பட்ட ஒயின்வகைகள், 100-க்கும் மேற்பட்ட ஓட்கா என சுமார் 1500-க்கும் மேற்பட்ட மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா காலத்தின்போது மதுபானங்களுக்கு 20 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இதனால் மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது.
புதுவையில் உள்ள 4 பிராந்தியங்களின் அருகில் உள்ள மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா பகுதிகளை விட பல முன்னணி நிறுவனங்களின் மது வகைகள் இங்கு கிடைப்பதால் மதுபானங்கள் விற்பனை மூலம் கலால்துறைக்கு ஆண்டுதோறும் வருவாய் உயர்ந்து வருகின்றது. இந்த ஆண்டு ரூ.1,393 கோடி மது விற்பனை மூலம் வருவாயாக கிடைத்துள்ளது.
இதுபற்றி கலால்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:-
கடந்த 2017-2018ல் ரூ.769.96 கோடியாக இருந்த மதுபான வருவாய் ஆண்டுதோறும் உயர்ந்தது. கொரோனா காலத்தில் வருவாய் குறைந்தது. தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 2021-ல் ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை தொட்டது. தற்போது முதன் முறையாக கலால்துறை வருவாய் ரூ. 1,393 கோடியாக உயர்ந்துள்ளது.
இது கடந்த நிதியாண்டை விட ரூ.321 கோடி அதிகமாகும். இதில் சாராயக்கடைகள் மூலம் ரூ.100 கோடியும் கள்ளுக்கடைகள் மூலம் ரூ.1 கோடியும் கிடைத்து உள்ளது.






