என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
அதிகாரிகள் மீது கென்னடி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
- பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினரின் எந்த விதமான தரவுகள் இல்லாத நிலையில் அதனை அமல்படுத்தக்கூடாது என்று முதல்-அமைச்சரிடம் தி.மு.க. கூட்டணி கட்சிகள் நேரடியாக வேண்டுகோள் வைத்தோம்.
- புதுவை அரசு தலைமை செயலக அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. தலைமை செயலக அதிகாரிகள் சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க . துணை அமைப்பாளர் அனி பால் கென்னடி எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமீப காலமாக முதல்-அமைச்சர் எடுக்கும் முடிவுகளுக்கு மாறாக அரசின் நிர்வாகம் சென்று கொண்டுள்ளது. பொருளாதாரத்தின் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் இடஒதுக்கீடு, மின்துறை தனியார் மயம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளில் மாநில நலன் சார்ந்த கொள்கை முடிவுகளில் அரசின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக மக்கள் நினைக்கின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினரின் எந்த விதமான தரவுகள் இல்லாத நிலையில் அதனை அமல்படுத்தக்கூடாது என்று முதல்-அமைச்சரிடம் தி.மு.க. கூட்டணி கட்சிகள் நேரடியாக வேண்டுகோள் வைத்தோம். அதிகாரிகளை அழைத்து பேசியும் இதுவரை தீர்வு எதுவும் காணப்படவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் அரசு நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என்பது துரதிஷ்டவ சமானது.
தமிழகத்தில் தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் மு .க. ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நூற்றாண்டு கால சமூகநீதி போராட்டத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என அனைத்து கட்சி கூட்டத்தில் சொல்லிய தோடு நில்லாமல் மாநில அரசின் வேலை வாய்ப்புகளில் ஒருபோதும் இந்த இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்படாது என திட்டவட்டமாக கூறி விட்டார்.
புதுவை அரசு தலைமை செயலக அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. தலைமை செயலக அதிகாரிகள் சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறார்கள். இடஒதுக்கீட்டு உரிமையை பறிப்பது நியாயமா? பா.ஜனதா கூட்டணி அரசு மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்றாலும் துரோகம் செய்யாமல் இருந்தால் போதும்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பா.ஜனதா ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தின் அரசு வேலை வாய்ப்பில் அமல் படுத்தப்படவில்லை.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிலும் மாநிலங்கள் இதனை அமல்படுத்த வேண்டும் என்று கட்டாய உத்தரவும் பிறப்பிக்கவில்லை. புதுவை மாநிலத்தில் ஏழை என்பவர்கள் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வருமானம் உள்ளவர்கள் என்று அரசு நிர்ணயித்துள்ளது.
ஆனால் மத்திய அரசோ முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் ஏழைகள் என்பவர்கள் ரூ.8 லட்சம் வருமானம் உள்ளவர்கள் என்று புதுவிதமான கணக்கினை வகுத்துள்ளது. இந்த கணக்கை மாநில அரசு அமல்படுத்திட முடியுமா?
எனவே முதல்-அமைச்சர் கடந்த 4-ந் தேதி அனைத்து கட்சி தலைவர்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டார் பெரும்பான்மை மக்களின் கோபத்துக்கு இந்த அமைச்சரவை ஆளாக நேரிடும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






