search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஸ்மார்ட் சிட்டி திட்ட ஆலோசனை கூட்டத்தில் கென்னடி எம்.எல்.ஏ. திடீர் வெளிநடப்பு
    X

    அதிகாரியுடம்  கென்னடி  எம்.எல்.ஏ.  வாக்குவாதம் செய்த காட்சி.

    ஸ்மார்ட் சிட்டி திட்ட ஆலோசனை கூட்டத்தில் கென்னடி எம்.எல்.ஏ. திடீர் வெளிநடப்பு

    • மக்கள் விரும்பும் திட்டங்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க வில்லை என புகார்
    • இது போல் பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    ஸ்மார்ட் சிட்டி திட்ட சிறப்பு ஆலோசனை கூட்டம் புதுவை கடற்கரை சாலை பழைய கோர்ட்டு வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரி மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற கென்னடி எம்.எல்.ஏ. தனது தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட வில்லை. ஆட்டுப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டம் குறித்து கோப்புகள் அனுப்பப்பட்டிருந்த நிலையில் திடீரென அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது என கூறி வெளிநடப்பு செய்தார்.

    உடனே அதிகாரிகள் அவரை சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து பேசிய கென்னடி எம்.எல்.ஏ. மக்கள் வேண்டும் என்று கேட்கும் திட்டங்களை கொண்டு வராமல் மக்கள் எதிர்க்கும் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துவது வேடிக்கையாக உள்ளது.

    பிரான்சுவா தோப்பில் நவீன கழிவறை கட்ட பூமி பூஜை நடத்தப்பட்டும் அதற்கான பணிகள் நடைபெறவில்லை. அதுபோல் திப்புராயபேட்டையில் நவீன மின் தகன மையம் அமைக்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இது போல் பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரி மணிகண்டன் பேசும் போது ஓட்டு போட்ட மக்களுக்கு பதில் அளிக்க வேண்டியதும் அவர்களுக்கு பணி செய்வதும் எம்.எல்.ஏ.க்களின் கடமையாகும். எனவே எம்.எல்.ஏ.க்கள் சுட்டிக்காட்டிய பணிகளை அதிகாரிகள் விரைந்து முடித்துத்தரவேண்டும் என்றார்.

    Next Story
    ×