search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்காலை சேர்ந்த திருமுருகன் அமைச்சராகிறார்: விரைவில் பதவியேற்பு
    X

    அப்பா பைத்தியம் சாமி கோவிலில் பூஜை செய்த பிரசாதத்தை முதலமைச்சர் ரங்கசாமி திருமுருகனுக்கு வழங்கியபோது எடுத்த படம்.

    காரைக்காலை சேர்ந்த திருமுருகன் அமைச்சராகிறார்: விரைவில் பதவியேற்பு

    • கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையை அவரின் மாளிகையில் இரவில் சந்தித்தார்.
    • புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் புதிய அமைச்சரை நியமிக்க மத்திய உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அமைச்சரவை நடக்கிறது.

    என்.ஆர்.காங்கிரசுக்கு முதலமைச்சர் ரங்கசாமி உட்பட 4 அமைச்சர்களும், பா.ஜனதாவுக்கு 2 அமைச்சர்களும் உள்ளனர். இதில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

    இவர் நேற்று தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தான் தலித் என்பதாலும், பெண் என்பதால் பாலின ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளானதாக தொகுதி மக்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

    அதோடு, தனது பணி தொகுதி மக்களுக்கு தொடரும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கும், முதலமைச்சர் ரங்கசாமிக்கும் தனித்தனியாக அமைச்சர் சந்திர பிரியங்கா அனுப்பியுள்ளார்.

    புதுவையில் 40 ஆண்டுக்கு பிறகு புதுவை சட்டமன்றத்தில் ஒரு பெண் அமைச்சராக இருந்தார்.

    அதோடு கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே பெண் எம்.எல்.ஏ.வும் சந்திர பிரியங்காதான். அவரும் ராஜினாமா செய்துள்ளது பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது.

    இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையை அவரின் மாளிகையில் இரவில் சந்தித்தார். சுமார் 10 நிமிடம் பேசிவிட்டு அவர் திரும்பி விட்டார்.

    அப்போதே ரங்கசாமி, தனது அமைச்சரவையை மாற்றுவதற்கு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். இதில் சந்திர பிரியங்காவுக்கு பதிலாக காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனை அமைச்சராக்க பரிந்துரை செய்துள்ளார்.

    புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் புதிய அமைச்சரை நியமிக்க மத்திய உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக கவர்னர் தமிழிசை மத்திய உள்துறைக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    அதே நேரத்தில் 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. இதனால் கவர்னர் தமிழிசை தேர்தல் நடைபெறும் தெலுங்கானா சென்றுவிட்டார். திருமுருகன் அமைச்சர் ஆவதற்கு மத்திய உள்துறையிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கவர்னர் தமிழிசை இன்று சென்னைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) மாலை திருமுருகன் அமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

    புதுவை மாநிலம் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியமாக உள்ளது. இதில் மாகி, ஏனாமில் தலா ஒரு எம்.எல்.ஏ. உள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    இதில் என்.ஆர்.காங்கிரசுக்கு காரைக்கால் வடக்கு தொகுதியில் திருமுருகனும், நெடுங்காடு தனி தொகுதியில் சந்திரபிரியங்காவும் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். காரைக்கால் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

    இந்த நிலையில் காரைக்கால் பகுதியை சேர்ந்த அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். காரைக்கால் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.

    இதனிடையே திருமுருகன் நேற்று மாலை கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி கோவிலில் பூஜை செய்த பிரசாதத்தை திருமுருகனுக்கு வழங்கினார்.

    Next Story
    ×