என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும்
- சி.பி.ஐ. இயக்குனருக்கு வையாபுரி மணிகண்டன் கடிதம்
- சென்டாக் கலந்தாய்வு நடத்தும் அதிகாரிகளும் இணைந்து மருத்துவ கல்லூரி இடங்களை முறைகேடாக அபகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் டெல்லி சி.பி.ஐ. இயக்குனருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் மருத்துவக்கல்லூரி இடங்களை பெறுவதில் பெரிய மோசடிகளும், முறைகேடுகளும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. ஆட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள வர்களும், அவர்களுக்கு கைக்கூலியாக செயல்படும் சில அரசியல்வாதிகளும், சென்டாக் கலந்தாய்வு நடத்தும் அதிகாரிகளும் இணைந்து மருத்துவ கல்லூரி இடங்களை முறைகேடாக அபகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
வருவாய் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பி னருக்கான சான்றிதழ், மத்திய அரசு அலுவலக பணியிட மாற்று சான்றிதழ் என பல போலி சான்றிதழ்களை கொடுத்து மருத்துவ இடங்களை அபகரிக்கின்றனர். மருத்துவ கல்லூரி இடங்களை வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பெற்றுத்தருவதில் ஊழல், முறைகேடுகள் நடக்கிறது.
சட்ட விதிகளின்படி புதுவை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்கள் சிலரின் சுயலாப நோக்கால் தட்டிப்பறிக்கப்படுகிறது. எனவே புதுவையில் நடைபெறும் இந்த மாபெரும் ஊழல், முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
மாணவர்களுக்கு போலியாக சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள், அதிகாரிகளுக்கு துணை செல்லும் ஆட்சியாளர்கள், இடைத்தரகர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






