search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    ஜனாதிபதி வருகையொட்டி இன்று போலீசார் இறுதி ஒத்திகை நடத்தினர். இதில் தலைமைச் செயலாளர் கலெக்டர் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    புதுவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • துணை ராணுவ படை வருகை
    • புதுவை விமான நிலையத்துக்கு செல்கிறார் ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார். அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு கர்நாடக மாநிலம் மைசூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை சென்னை வருகிறார்.

    சென்னையில் ராஜ்பவனில் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார். தொடர்ந்து ராஜ்பவனில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். நாளை இரவும் ராஜ்பவனில் தங்குகிறார்.

    நாளை மறுநாள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு கவர்னர் தமிழிசை, முதல்- அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஜனாதிபதியை வரவேற்கின்றனர்.

    அங்கிருந்து கார் மூலம் ஜிப்மர் செல்கிறார். ஜிப்மர் கலையரங்கில் நடைபெறும் விழாவில் புற்றுநோய் சிகிச்சைக்கான லீனியர் ஆக்சிலேட்டர் உபகரணத்தை தொடங்கி வைக்கிறார். அதோடு, தேசிய ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் வில்லியனூரில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கை கொண்ட மருத்துவமனையையும் அவர் திறந்து வைக்கிறார்.

    பின்னர் அவர் கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் தங்கும் விடுதியில் ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து மாலையில் மணக்குள விநாயகர் கோவிலுக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு சென்று கைவினை பொருட்களை பார்வையிட்டு, கலைஞர்களோடு உரையாடுகிறார்.

    அங்கிருந்து திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கு வழிபடுகிறார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் பாரம்பரிய உணவு விருந்தில் பங்கேற்கிறார். பின்னர் நீதிபதிகள் தங்கும் விடுதியில் ஓய்வெடுக்கிறார்.

    மறுநாள் (செவ்வாய்கிழமை) காலை அரவிந்தர் ஆசிரமத்துக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஆரோவில் செல்கிறார். அங்கு மாத்ரி மந்திரை பார்வையிடுகிறார். அதன் பின் ஆரோவில்லில் நடைபெறும் கண்காட்சி, அரவிந்தரின் 75-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். அங்கேயே மதிய உணவு அருந்துகிறார்.

    ஆரோவில்லில் மாலை 4 மணி வரை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஜனாதிபதி அங்கிருந்து நேராக புதுவை விமான நிலையத்துக்கு செல்கிறார் ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார். அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி புதுவை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி காரில் செல்லும் சாலைகளின் இருபுறமும் சவுக்கு கட்டைகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    டெல்லியிலிருந்து புதுவைக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் வந்துள்ளனர். அவர்கள் ஜனாதிபதி பங்கேற்கும் இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். தமிழகம், புதுவை போலீசாருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். மாலையிலும், இன்று காலையிலும் ஜனாதிபதி வருகையையொட்டி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    11 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து ஜிப்மர் வரை காரில் செல்வதுபோல ஒத்திகை பார்த்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்றன. விழா முடிந்து கடற்கரை சாலைக்கு வருவது, கவர்னர் மாளிகை செல்வது ஆகியவற்றையும் ஒத்திகை நடத்தினர்.

    புதுவை டி.ஜி.பி ஸ்ரீனிவாஸ் தலைமையில் போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி வருகையையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் துணை ராணுவ படையின் 2 கம்பெணி படையினர் பாதுகாப்பு பணிக்காக புதுவை வந்துள்ளனர்.

    Next Story
    ×