search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவர்னர் உரை மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை-சட்டசபையில்  கென்னடி எம்.எல்.ஏ. பேச்சு
    X

    கோப்பு படம்.

    கவர்னர் உரை மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை-சட்டசபையில் கென்னடி எம்.எல்.ஏ. பேச்சு

    • கவர்னர் உரை உண்மையில் இந்த மாநிலத்திற்கு உகந்ததா? கவர்னரே வேண்டாம் என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை.
    • புதுவைசிவம், தமிழ்ஒளி ஆகியோர் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களை புனரமைக்கும் திட்டம் ஏதும் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதம் நடந்தது. இதில் தி.மு.க., எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பேசியதாவது:-

    கவர்னர் உரை உண்மையில் இந்த மாநிலத்திற்கு உகந்ததா? கவர்னரே வேண்டாம் என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை. இந்திய விடுதலை வீரர்களின் விடுதலை வேட்கைக்கு அடைக்கலம் கொடுத்த மண் புதுவை. 8 மணி நேர வேலையினை ஆசிய கண்டத்திற்கு வாங்கிக்கொடுத்த மண்.

    தற்போது மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னரின் அதிகாரத்திற்கு கீழ்படிந்து நடக்கும் நிலைமையில் இருக்கிறது. இதற்காகவா நாம் பிரெஞ்சு தேசத்திலிருந்து விடுதலை அடைந்தோம் என எண்ணிப்பார்க்க வேண்டும். கவர்னர் உரை மாநிலத்தில் ஆற்றிய பணிகள் 50 சதவீதம், கொள்கை விளக்கம் 50 சதவீதம் இருக்க வேண்டும்.

    இந்த உரை இந்த மாநிலத்தின் துறைகளின் செயல்களை விளக்கும் உரையாக இருக்கிறதே தவிர மக்கள் நலனை சார்ந்த உரையாக இல்லை. எந்த முன்னறிவிப்பும் இல்லாத ஒரு உரை.

    நிதி மேலாண்மை குறித்து உரையில் குறிப் பிட்டுள்ளார். மத்திய அரசு கொடுத்து வந்த ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை தொடர்ந்து அளிக்கப் பட்டதா என்று குறிப்பி டவில்லை.

    கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு முன்வைத்த ரூ.3 ஆயிரத்து 400 கோடி குறித்து ஒரு வார்த்தையும் இல்லை.

    உள்நாட்டு உற்பத்தியிலும் தனிநபர் வருமானத்திலும் குறைவாக உள்ள மாநிலங்களான கோவா, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம்,போன்றவை மாநில அந்தஸ்து தகுதியோடு உள்ளது. ஆனால் நமக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? குறைந்தபட்சம் நிதிக்கமிஷனில் கூட நம்மை சேர்க்கவில்லை.

    இதுதான் மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னர் நம்மை வழிநடத்தும் முறையா? தமிழகம் போல புதுவை மண்ணின் புகழ் பெற்ற கவிஞர்கள் பாவேந்தர் , புதுவைசிவம், தமிழ்ஒளி ஆகியோர் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களை புனரமைக்கும் திட்டம் ஏதும் இல்லை.

    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் வாங்கிய காப்பீடு கார்டுக்கு மரியாதையே இல்லை. மின்துறை தனியார் மயம் ஆகாது என கவர்னர் குறிப்பிடாதது ஏமாற்றமளிக்கிறது.

    தொழில் முனைவோர் மாநாட்டில் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வந்தன? எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன? எத்தனை 1000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டது? என எந்த விவரமும் உரையில் இடம் பெறவில்லை.

    புதுவை நகராட்சியினை மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கான முடிவு இந்த உரையில் இல்லை. உழவர்கரை தாலுகாவை இண்டாகப் பிரித்து புதிய தாலுக்கா உருவாக்கும் அறிவிப்பாவது இடம் பெற வேண்டும்.

    மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் கொள்கை முடிவினை எடுக்க கவர்னர் முயற்சிக்கவில்லை. மொத்தத்தில் கவர்னர் அரசின் துணை இல்லாததால் சிறக்க வில்லை. உரையில் பாரதியார், பாரதிதாசனின் தமிழோசை இருக்கிறது, ஆனால் மக்களுக்கு நன்மைதான் இசைக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×