என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
தமிழக அரசியலில் மூக்கை நுழைப்பதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிறுத்தவேண்டும்
- கவர்னர் கட்சிக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்.
- ஒன்றிய அரசில் மாநிலத்திற்கு பெற வேண்டிய நிதியை பெற்று வாருங்கள்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தின் கவர்னர் தமிழசை ஆந்திரா, புதுவையை தொடர்ந்து தமிழகத்தையும் ஆள வேண்டும் என்ற ஆசையால் அடிக்கடி தமிழ்நாடு அரசியலில் மூக்கை நுழைக்கிறார். தமிழ்நாட்டை பற்றி நான் பேசுவதை யாரும் தடுக்க முடியாது என்று சவால் வேறு விடுகிறார்.
மணிப்பூர் கவர்னர் இல.கணேசன், ஜார்கண்ட் கவர்னர் .பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இப்படியா பேசுகிறார்கள்? அவர்களுக்கு இல்லாத தமிழ்நாட்டு பாசமா தமிழிசைக்கு உண்டு 10முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பல்வேறு பொறுப்புகளை வகித்து பல தலைவர்களுடன் மக்கள் பணியாற்றிய முதுபெரும் திராவிடத் தலைவர், தி.மு.க பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகனை, ஒருமுறைகூட தேர்தலில் வெற்றி பெற இயலாத தமிழிசை சவால் விடுவதை ஏற்க முடியாது.
கவர்னர் கட்சிக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். தமிழக பா.ஜனதா தலைவராக இருந்தபோது தாமரையை மலர வைப்பேன் என மூச்சுக்கு முப்பது முறை கூறி முடியாமல் போனதை இப்போது நிறைவேற்றலாமா என மனக்கணக்கு போட்டு தமிழ்நாடு அரசியலில் மூக்கை நுழைக்கிறார்.
புதுவை மக்களின் விருப்பத்தை, முடங்கி கிடக்கும் திட்டங்களை நிர்வாகியாக செயல்படுத்துங்கள். பெஸ்ட் புதுவையை உருவாக்க உழையுங்கள். ஒன்றிய அரசில் மாநிலத்திற்கு பெற வேண்டிய நிதியை பெற்று வாருங்கள். இதை விட்டுவிட்டு 3வதாக இன்னொரு மாநிலத்தை ஆள ஆசைப்படுவதையும், எங்கள் கழகத்தின் மூத்த அமைச்சர் பற்றி விமர்சனம் செய்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






