என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதை கவர்னர் நிறுத்த வேண்டும்
- புதுவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா கண்டனம்
- ஒரு பிரதிநிதியை பார்த்து உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையின் அனைத்து விவகாரத்திலும் தலையிடும் கவர்னர் ஜிப்மர் விவகாரத்தில் ஏன் தலையிடவில்லை ? ஜிப்மருக்கு எதிராக தி.மு.க. போராட்டம் நடத்தி ஒரு மாதம் ஆகியும் அதற்கு கவர்னர் பதிலளிக்கவில்லை. இந்த நிலையில் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நேற்றைய தினம் ஜிப்மர் மருத்துவமனை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்.
காலையில் போராட்டம் நடந்தவுடன் மதியம் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி எதிர்க்கட்சிகள் செய்யும் போராட்டத்தை கவர்னர் விமர்சித்துள்ளார். போராட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், எம்.பி.க்கு ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. கவர்னராக இருந்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை பார்த்து உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது. விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் தொகுதி வேலையை மட்டும் பார்க்கச் சொல்வதும், புதுவையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கவர்னர் கூறியிருப்பது:-
அதிகாரத்தின் உச்சமாகவே பார்க்க முடிகிறது. கவர்னரின் இந்த சர்வாதிகார பேச்சிற்கு தி.மு.க. கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மத்திய அரசிடம் புதுவை அரசு கோரியுள்ள நிதியைப் பெருவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தோ கவர்னர் இதுவரை வாய் திறக்கவில்லை. அரசு அறிவித்துள்ள திட்டங்களை எதிர்பார்த்து மக்கள் காத்தி ருக்கிறார்கள். அதற்கெல்லாம் பதிலளிக்காத கவர்னர் தொடர்ந்து அரசியல் பேசுவதும், எதிர்க்கட்சிகளை தனது அதிகாரத்தை பயன்படுத்தி வசைபாடு வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இது புதுவை மாநிலத்திற்கு ஏற்றதல்ல. கவர்னர் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.






