search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விலை குறைவு என்று ஆன்லைனில் ஏமாற்றும் மோசடி கும்பல்
    X

    கோப்பு படம்.

    விலை குறைவு என்று ஆன்லைனில் ஏமாற்றும் மோசடி கும்பல்

    • பொதுமக்கள் உஷாராக இருக்க சைபர் கிரைம் எச்சரிக்கை
    • ரூ.9 3/4 லட்சம் பணத்தை அனுப்பிய பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

    புதுச்சேரி:

    புதுவையை சேர்ந்த 5 பேர் ஆன்லைனில் ரூ.13 லட்சம் பணத்தை இழந்தனர்.

    புதுவையை சேர்ந்த பெண் இணையத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து குறைந்த விலையில் உலர் பழங்கள் (டிரை ப்ரூட்ஸ்) கிடைக்கிறது என்பதை நம்பி ரூ.18 ஆயிரத்துக்கு ஆர்டர் செய்து கடந்த 15 நாட்களாக பொருள் வரவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

    உங்களுடைய கிரெடிட் கார்டின் கடன் வாங்கும் தொகையை அதிகரித்து தருகிறோம் என்று பேசி வந்த எண்ணுக்கு ஓ.டி.பி.யை சொன்னவுடன் கிரெடிட் கார்டில் ரூ.27 ஆயிரம் பொருளை இணை மோசடிக்காரர்கள் வாங்கி அவரை ஏமாற்றி உள்ளனர்.

    மற்றொருவர் மார்க்கெட் மதிப்பில் ரூ. 4 லட்சம் விலை உடைய ஹைட்ராலிக் லிப்டிங் மிஷினை ரூ.1 3/4 லட்சத்துக்கு தருகிறோம் என்று இணையவழியில் வந்த விளம்பரத்தை நம்பி பணத்தை செலுத்தி 10 நாட்களாக பொருள் மற்றும் எந்த தகவலும் இல்லை என்று புகார் அளித்துள்ளார்.

    புதுவையைச் சேர்ந்த 2 பேர் இணைய வழியில் முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு 20 சதவீதம் உங்களுக்கு வருமானம் தருகிறோம் என்று சொன்னதை நம்பி பல்வேறு வங்கி கணக்கில் ரூ.9 3/4 லட்சம் பணத்தை அனுப்பிய பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அனுப்பிய பணத்தையும் எடுக்க முடியவில்லை என்று புகார் கொடுத்துள்ளனர்.

    இந்த புகார் சம்பந்தமாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி மற்றும் கார்த்திகேயன் விசாரணை செய்து வருகின்றனர்.

    இது பற்றி சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது:-

    செல்போனில் வரும் இணைய வழியில் வருகின்ற எந்த விளம்பரத்தையும் நம்பி பணத்தை செலுத்த வேண்டாம். வேலைவாய்ப்பிற்கு பணம் செலுத்த வேண்டாம். முக்கியமாக சந்தை மதிப்பில் இருக்கின்ற பொருட்களை சந்தை மதிப்பை விட மிகவும் விலை குறைவாக கொடுப்பதாக வருகின்ற விளம்பரங்களை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.

    பல்வேறு முக்கிய நிறுவனங்களின் பெயர்களில் படிப்பு வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு ரூ.100 ரூ.500 செலுத்தி எங்களுடைய அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அனுப்புங்கள் என்றெல்லாம் நிறைய விளம்பரங்கள் இணைய வழியில் வந்து கொண்டிருக்கிறது. அது போல் எதையும் நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×