search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மின்கசிவால் அலறியடித்து ஓடிய மீன் வியாபாரிகள்
    X

     கிழக்கு கடற்கரை சாலையில் நவீன அங்காடியில் மீன்களை ஏலம் எடுத்து வியாபாரிகள் பிரித்து எடுக்கும் காட்சி.

    மின்கசிவால் அலறியடித்து ஓடிய மீன் வியாபாரிகள்

    • நவீன மீன் அங்காடியில் மொத்த மீன்களை ஏலம் விட மீனவர்கள் ஒப்புக் கொண்டனர்.
    • இதையடுத்து அந்த இடத்தில் மணலை கொட்டி தற்காலிக பாதுகாப்பு ஏற்பாட்டை போலீசார் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதி பெரிய மார்க்கெட் உள்ளே மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது.

    அதன் வெளிப்பகுதியான நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில் வெளியூர்களில் இருந்து லாரிகளில் வரும் மீன்கள் காலை நேரத்தில் ஏலம் விடப்பட்டது. இதற்கு தடை விதித்தாலும் தொடர்ந்து ஏலம் விடப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் கடும் நெரிசல் நிலவியது.

    இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், நேரு வீதி-காந்தி வீதியில் நடைபெறும் மீன்கள் ஏலத்தை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து மொத்த மீன் வியாபாரம் செய்யும் மீனவர்களுடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி முதல் நவீன மீன் அங்காடியில் மொத்த மீன்களை ஏலம் விட மீனவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    நேற்று குறைந்தஅளவே மீன்கள் நவீன மீன் அங்காடிக்கு வந்தன.இந்த நிலையில் இன்று மாநில எல்லைகளில் மீன் கொண்டுவந்த வாகனங்கள் நவீன மீன் அங்காடிக்கு திருப்பி விடப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட வேன்களில் கடலூர், நாகை, காசிமேடு போன்ற பகுதிகளில் இருந்து மீன், இறால், கனவா போன்ற மீன்கள் அதிகளவில் வந்தன.

    10 வண்டிக்கே போதிய இடவசதியின்றி வியா பாரிகளும் மீனவர்களும் சிரமம் அடைந்தனர். நவீன அங்காடியின் கட்டிடம் பெரிய அளவில் சரியான திட்டமிடல் இன்றி கட்டப்பட்டுள்ளதாக புகார் கூறிய மீனவர்கள், மீன் கொண்டு வரும் வேன், மீன் வாங்க வரும் வியாபாரிகளின் ஆட்டோ, பொது மக்களின் வண்டிகளை நிறுத்த இட வசதியில்லை என தெரிவித்தனர்.அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நவீன மீன் அங்காடியில் இன்று காலை அதிகளவில் மீனவ பெண்கள் மீன்களை வாங்கி பிரித்து எடுத்து கொண்டிருந்தனர்.

    அப்போது 5 பெண்களுக்கு திடீரென மின்சாரம் தாக்கியது. இதனால் அவர்கள் அலறி ஓடினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு சோதனை செய்தனர்.

    அங்கிருந்த மின் பெட்டியின் ஒயர் வெளியே தெரியும்படி இருந்தது. இதில் ஐஸ் தண்ணீர் பட்டவுடன் புகை மற்றும் நெருப்பு கிளம்பி மின்கசிவு ஏற்பட்டு மீனவ பெண்களை மின்சாரம் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த இடத்தில் மணலை கொட்டி தற்காலிக பாதுகாப்பு ஏற்பாட்டை போலீசார் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×