என் மலர்
புதுச்சேரி

விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
குருவிநத்தத்தில் விவசாயிகள் சாலை மறியல்
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
- பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு அலுவலகத்தில் விவசாயிகள் விவசாய சங்கத்தினர் கடந்த 17-ந் தேதி முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதில் புதுவையின் நெல் களஞ்சியமான பாகூர் பகுதியில் சம்பா நெல் பயிர் சாகுபடிக்காக விவசாயிகள் தயாராகி வருகின்றனர் பல பகுதிகளில் விவசாயிகள் நடவு நட்டுள்ளனர்.
மழைக்காலத்திற்கு முன்பாக வடிகால் வாய்க்கால்கள் பாகூர் பகுதியில் தூர்வாரப்படாததால் சிறிய மழைக்கு விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட விவசாயிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக வடிகால் வாய்க்கால்களை தூர்வாரக்கோரி பாகூர் பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு அலுவலகத்தில் விவசாயிகள் விவசாய சங்கத்தினர் கடந்த 17-ந் தேதி முற்றுகையிட்டனர்.
இந்நிலை நேற்று இரவு பாகூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி மழை நீர் வெளியேற முடியாமல் இருந்தது.
சாலை மறியல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்று கூடினர் குருவி நத்தம் தூக்கு பாலத்தில் சாலை மறியல் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் கூறும்போது, போர்க்கால அடிப்படையில் முன்கூட்டியே தூர்வாரக் கோரி நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் பொதுப்பணித்துறை அலட்சியம் காட்டியதால் நடவு செய்யப்பட்ட விவசாய நிலங்கள் தற்பொழுது நீரில் மூழ்கி உள்ளன.
இது வெளியேற்ற படாவிட்டால் நடப்பட்ட நடவுகள் அனைத்தும் அழுகிவிடும். வாய்க்கால்கள் தூர் வாரும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறினார்.






