என் மலர்
புதுச்சேரி

பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்ட போது எடுத்த படம்.
வாய்க்கால் தூர் வராததால் விளைநிலங்கள் தேங்கி நிற்கும் மழை நீர்
- தமிழகம் மற்றும் புதுவையில் பருவ மழை தொடங்கிய நிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
- பருவ மழை தீவிரமடையும் முன்பே இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் பெய்த சிறிய மழைக்கு விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின.
புதுச்சேரி:
தமிழகம் மற்றும் புதுவையில் பருவ மழை தொடங்கிய நிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து ஈரப்பதமாகவே காணப்பட்டு வருகிறது.
புதுவை மாநில நெல் களஞ்சியமான பாகூரில் பகுதியில் சம்பா போக நெல் பயிர் சாகுபடிக்காக விவசாயிகள் தயாராகி வருகின்றனர். பல பகுதிகளில் நெல் நடவு நட்டுள்ளனர்.
பருவ மழை தீவிரமடையும் முன்பே இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் பெய்த சிறிய மழைக்கு விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட விவசாயிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக வடிகால் வாய்க்கால்களை தூர்வாரக்கோரி பாகூர் பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு அலுவலகத்தை விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து உதவி பொறியாளர் மனோகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உடனடியாக வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். உயர் அதிகாரிகள் தொடர்பு கொண்டு நாளை தூர்வாரும் பணியை தொடங்குவதாக உறுதி அளித்ததால் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.






