search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    டிப்பர் லாரிகள் நுழைய தடை
    X

    போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள காட்சி.

    டிப்பர் லாரிகள் நுழைய தடை

    • விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் நிகழ்வுகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
    • மக்கள் தங்கள் ஊர் வழியாக டிப்பர் லாரி செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    திருவக்கரை பகுதியில் இருந்து ஜல்லி ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக சொல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் நிகழ்வுகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகப் பகுதியான நெமிலியில் ஒரு பட்டதாரி வாலிபர் டிப்பர் லாரி மோதி பலியானதால் அப்பகுதி மக்கள் தங்கள் ஊர் வழியாக டிப்பர் லாரி செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதனால் திருமங்கலம் பாதை , கொடுக்கூர், எறையூர், பெரும்பாக்கம் வழியாக டிப்பர் லாரிகள் செல்லவில்லை.

    ஆனால் புதுவை பகுதியான சந்தை புதுக்குப்பம், சுத்துக்கேணி, காட்டேரிக் குப்பம் வழியாகவும், குமாரபாளையம் வழியாகவும் டிப்பர் லாரிகள் புதுவையை நோக்கி செல்லத் தொடங்கின.

    நேற்று சுத்துக் கேணி மயிலம் பாதையில் சாப்ட்வேர் என்ஜினீயர், அவருடன் வந்த உறவுக்கார பெண் ஆகியோர் டிப்பர் லாரி மோதியதில் படுகாயம் அடைந்து ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால்

    ஆவேசமடைந்த பொதுமக்களும் அவர்களது உறவினர்களும் லாரியை உடைத்து தீ வைத்து கொளுத்த முயன்றனர். இதனைத் தொடர்ந்து காட்டேரிக்குப்பம் வழியாகவும் டிப்பர் லாரிகள் செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று காட்டேரிக்குப்பம் போலீசார் சந்தை புதுக்குப்பம், குமாரபாளையம் ஆகிய இரண்டு ஊர்களில் பேரிகேட் மூலமாக தடுப்பு அமைத்துள்ளனர்.

    இப்பகுதி வழியாக புதுவை எல்லைக்குள் டிப்பர் லாரிகள் செல்ல தடை விதித்துள்ளனர். காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையில் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருக்கனூர் கடைவீதி வழியாகவும் அதி வேகமாக டிப்பர் லாரிகள் செல்வதால் திருக்கனூர் கடைவீதிக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் டிப்பர் லாரிகளை கண்டு அச்சத்தில் உள்ளனர்.

    திருக்கனூர் கடைவீதி வழியாகவும் டிப்பர் லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×