search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பத்திரப்பதிவுத்துறையை முறைப்படுத்த வேண்டும்-எதிர்கட்சித்தலைவர் சிவா வலியுறுத்தல்
    X

    பத்திரப்பதிவுத்துறையை முறைப்படுத்த வேண்டும்-எதிர்கட்சித்தலைவர் சிவா வலியுறுத்தல்

    • பத்திரங்களை முறையாக பதிவு செய்ய பல்வேறு விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது.
    • டையாள அட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு பதிவிடும் முறை இருந்தும் இந்த முறைகேடுகள் எப்படி நடைபெறுகின்றன?

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் எதிர்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது:-

    புதுவை பத்திரத் துறையில் பல சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தவறுகள் நடந்து நில உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக பத்திரங்களை முறையாக பதிவு செய்ய பல்வேறு விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது.

    அதையும் மீறி முறைகேடுகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. பதிவு நேரத்தில் விற்பவர், வாங்குபவர்களின் புகைப்படங்கள், கைரேகை, அடையாள அட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு பதிவிடும் முறை இருந்தும் இந்த முறைகேடுகள் எப்படி நடைபெறுகின்றன?

    சமீபத்தில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் அபகரிப்பு தீர்வாக புதுவை கலெக்டர் தலைமையில் குழு அமைத்துள்ளது முறைகேடுகளுக்கு சாட்சியாக உள்ளது. பாதிக்கப்பட்ட பிரெஞ்சு குடியுரிமை வாசிகள் தூதரகத்திற்கு அளித்த புகாரின் பேரில் நமது மாநில அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

    பதிவு செய்யும்போது சார் பதிவாளர் சர்வே எண், பெயர், முகவரி பற்றி முறையாக சரிபார்க்காமல் தவறும் நிலையில் மீண்டும் அந்த விற்பனை திருத்தல் பத்திரத்திற்கு துணை ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பத்து ஓராண்டு வரை காத்திருக்கும் நிலையும், மறுபடியும் பத்திரப் பதிவிற்கான வீண் செலவும் ஏற்படுகிறது. பதியும்போது முழுமையான ஆய்வு செய்யவும் திருத்தல் பத்திரத்திற்கான விதிமுறைகளை சுலபமாக்கவும் நடவடிக்கை தேவைப்படுகிறது.

    ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான ஓராண்டு காலத்திற்கு நில மதிப்பீடு செய்யப்படுகிறது. மதிப்பீடு முடிந்தவுடன் உடன் பத்திரப்பதிவு பணி தொடங்காமல் 2 மாதம் பதிவிற்காக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

    இந்த காலதாமதம் களையப்பட்டு உடன் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். வீடுகட்ட மனை வாங்குபவர்கள் அனுமதிக்காக நகரத் திட்டக் குழுமத்திற்கு விண்ணப்பித்து குறித்த கட்டணத்தை செலுத்தியும் அனுமதி பெற முடியாமல் அலைகழிக்கப்படுகின்றனர்.

    அங்கு லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இது முற்றிலும் களையப்பட வேண்டும். முறைகேடுகள் களையப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை அரசு அக்கறையோடு பரிசீலித்து பத்திரப் பதிவுத் துறையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×