என் மலர்
புதுச்சேரி

விஷ்வ ஹிந்து பரிஷ்த்தின் அகில பாரத இணைச் செயலாளர் நாகராஜன் பேசிய போது எடுத்த காட்சி.
இந்து சமய அறநிலைத்துறையை தனி வாரியமாக அறிவிக்க வேண்டும்-விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்
- விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில பாரத இணை செயலாளர் நாகராஜன் புதுவை வந்தார். அவர் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
- திருக்கோவில்களை ஹிந்து சமய அறநிலைய துறை வியாபார நோக்கோடு அணுகிவருகிறது.
புதுச்சேரி:
விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில பாரத இணை செயலாளர் நாகராஜன் புதுவை வந்தார். அவர் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு உலகெங்கிலும் உள்ள ஹிந்து மக்களை ஒற்றுமைப்படுத்தவும், ஹிந்து பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை காக்கவும் பணியாற்றி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா இந்த ஆண்டும் அரசியல் தலையீடு இல்லாமல் சிறப்பாக நடைபெற வேண்டும். நம்நாட்டில் ஹிந்து சமயத்தில் உள்ள பாரம்பரியமான விஷயங்களை சீர்குலைக்கும் வகையில் பீட்டா என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இவர்கள் நோக்கம் மிருகங்களை காக்க வேண்டும் என்பது அல்ல. மாறாக தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை சீர்குலைக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.
நம்நாட்டில் பசுவதை தடை சட்டம் இயற்ற வேண்டும், எந்தவித தடங்களும் இல்லாமல் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும்.
திருக்கோவில்களை ஹிந்து சமய அறநிலைய துறை வியாபார நோக்கோடு அணுகிவருகிறது. ஆலய நிர்வாகத்தில் ஆன்மீகத்தில் நம்பிக்கையும், நாட்டமும் உள்ளவர்களையே நியமிக்க வேண்டும். ஹிந்து சயம அறநிலைய துறையை உத்தரகாண்ட் மற்றும் கர்நாடக மாநில அரசுகள் தனிவாரியமாக அறிவித்ததை விசுவ ஹிந்து பரிஷத் வரவேற்கிறது. இது போன்ற தமிழக மற்றும் புதுவை அரசுகளும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் போது வட தமிழ்நாடு அமைப்பு செயலாளர் ராமன் மாநில மேலிட பொறுப்பாளர் வேல்முருகன், புதுவை தலைவர் ரவிக்குமார், துணைத்தலைவர் இளங்கோவன், பொருலாளர் கோவிந்தன் நகர தலைவர் சத்யமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






