என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கருவடிகுப்பத்தில் கிரிக்கெட் மைதானம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்
- கருவடிகுப்பத்தில் நகராட்சிக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தில் காடு வளர்ந்துள்ளது. இது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
- கடந்த சில ஆண்டுக்கு முன் 65 வயது மூதாட்டி வன்கொடுமை செய்யப்பட்டார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-
கல்யாணசுந்தரம்(பா.ஜனதா):- கருவடிகுப்பத்தில் நகராட்சிக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தில் காடு வளர்ந்துள்ளது. இது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
இங்கு விளையாட்டு மைதானம் அமைக்க அரசுக்கு உத்தேசம் உள்ளதா? தனியார் பங்களிப்புடன் மைதானம் அமைக்க அரசு தடையில்லா சான்று வழங்குமா? முதல்-அமைச்சர் ரங்கசாமி:- நகராட்சியின் நிதி நெருக்கடியை கருத்தில்கொண்டு தகுதியுள்ளவர்களுக்கு நீண்டகால குத்தகை, வருவாய் பகிர்வு அடிப்படையில் இந்த நிலத்தை வழங்குவதன் மூலம் கணிசமான வருவாய் ஈட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்யாணசுந்தரம்: - இங்கு கடந்த சில ஆண்டுக்கு முன் 65 வயது மூதாட்டி வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த நிலத்தை பொதுமக்கள் சிறிது, சிறிதாக ஆக்கிரமித்து வருகின்றனர்.
இங்கு விளையாட்டு மைதானம் அமைத்தால் இளைஞர்களுக்கு உதவிகரமாக இருக்கும். கிரிக்கெட் மைதானம் அமைத்தால் இளைஞர்கள் பயிற்சி பெற முடியும்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி:- நிலத்தை சுத்தம் செய்ய முதலில் நடவடிக்கை எடுப்போம். அரசுக்கு வருவாய் வரும் வகையில் எதை கொண்டுவர முடியுமோ? அதை கொண்டுவருவோம். அங்கு 2 கிரிக்கெட் மைதானம் அமைக்கலாம் அல்லது தீம்பார்க் அமைக்கலாம். அதன்மூலம் வருமானம் வரும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.