என் மலர்
புதுச்சேரி

கூட்டத்தில் சிவா எம்.எல்.ஏ. பேசிய காட்சி.
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கட்சிகள் தலைமை செயலகம் முற்றுகை-நாளை மறுநாள் நடக்கிறது
- மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
- பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடை அமல்படு த்தக்கூடாது என முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து கூறினோம்.
புதுச்சேரி:
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான இ.டபிள்.யூ.எஸ். 10 சதவீத இட ஒதுக்கீட்டை புதுவை மாநிலத்தில் நடைமுறைப்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி எதிர்கால போராட்ட நடவடிக்கைகளை திட்ட மிடுவதற்கான மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா, சுப்பையா, காங்கிரஸ் சார்பில் மணவாளன், லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு புருஷோத்தமன் தி.க. சிவ.வீரமணி, மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீர.மோகன்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது உமர் பாரூக், சமூக நீதிப் பேரவை கீதநாதன், மனிதநேய மக்கள் கட்சி இஸ்மாயில், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வன், தமிழர் களம் அழகர், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் கூட்டமைப்பு முருகானந்தம், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, திராவிடர் விடுதலைக் கழகம் லோகு அய்யப்பன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி கலைப் பிரியன், அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் தி.மு.க. அமைப்பாளர் சிவா, இந்தியகம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடை அமல்படு த்தக்கூடாது என முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து கூறினோம். அப்போது அதிகாரிகள், இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்த மாட்டோம் என கூறினர். ஆனால் இப்போது அரசு வெளியிட்டுள்ள பணி தேர்வு அறிவிப்புகளில் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். முதல்-அமைச்சர், அமைச்சர்களின் உத்தரவுகளை மீறி செயல்படுவதாக தெரிகிறது. இதை கண்டித்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.






