என் மலர்
புதுச்சேரி

திருபுவனை கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- தற்போது பஞ்சு விலை குறைந்தும் (ஸ்பின்கோ) நிர்வாகம் ஆலையை இயக்க முன்வரவில்லை.
- ஊழியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அதிரடியாக ஆலை நுழைவு போராட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் திருபுவனையில் இயங்கி வந்த கூட்டுறவு நூற்பாலை (ஸ்பின்கோ) மூலப் பொருள் (பஞ்சு) விலை உயர்வை காரணமாக கடந்த 2022 ஜூன் 8-ந் தேதி முதல் ஆலை இயக்கம் நிறுத்தப்பட்டது. தற்போது பஞ்சு விலை குறைந்தும் (ஸ்பின்கோ) நிர்வாகம் ஆலையை இயக்க முன்வரவில்லை.
இதை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தின. இதன் விளைவாக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கடந்த மார்ச் 26-ந் தேதி முதல்வர் ஏப் 1-ந் தேதிக்கு பிறகு ஆலையை இயக்க கமிட்டி அமைப்பதாக உறுதியளித்தார். ஆனால் இந்நாள் வரை கமிட்டி அமைப்பது தொடர்பாக எவ்வித முகாந்தரமும் இல்லாததால் தொடர் போராட்டம் நடத்துவதென்று அனைத்து சங்கங்களும் முடிவெடுத்து, இன்று அரசுக்கு எதிராக ஊழியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அதிரடியாக ஆலை நுழைவு போராட்டம் நடத்தினார்கள்.
இதற்கு புதுவையில் உள்ள அனைத்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்து ஆலையின் வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து புதுவை -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போது 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்து திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் வைத்திருந்தனர்.






