search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் சேமிப்பு பணத்தில்  பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய சகோதரர்கள்
    X

    புதுவையில் சேமிப்பு பணத்தில் பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய சகோதரர்கள்

    • தன்னுடன் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என முடிவு செய்தனர்.
    • ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டையில் அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.

    பள்ளியில் பயின்று வரும் 462 மாணவர்களுக்கு அடையாள அட்டை இல்லை. இதே பள்ளியில் படிக்கும் சகோதரர்களான 8-ம் வகுப்பு பயிலும் விஜய விஜேஷ்குமார், 10-ம் வகுப்பு பயிலும் விஜய விவேஷ்குமார் ஆகியோர் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என முடிவு செய்தனர்.

    இதுகுறித்து தனது பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் விருப்பத்தை தெரிவித்தனர். ஓவியப்போட்டி, கோலப்போட்டி, சதுரங்க போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கேரம் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அதன் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகளை கொண்டு சுமார் ரூ.10 ஆயிரத்தை சகோதரர்கள் சேமித்தனர்.

    சேமித்து வைத்த பணத்தை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தயார் செய்து தாங்கள் படித்து வரும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வழங்கினர்.

    மறைந்த சகோதரர்களின் தந்தை விஜயகுமாரின் பிறந்தநாளில் மாணவர்களுக்கு இந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    விழாவில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, பள்ளி தலைமை ஆசிரியர் பாரி மற்றும் அடையாள அட்டை வழங்கிய மாணவர்களின் தாய் ப்ரீத்தி விஜயகுமார், ஆசிரியர்கள் அடையாள அட்டைகளை வழங்கினர்.

    இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    Next Story
    ×